இருவேறு வாகன விபத்துக்களில் 2 இளைஞர்கள் பரிதாப மரணம்
இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிரிந்திவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹங்வெல்ல - ஊரபொல வீதியில் நிட்டம்புவவிலிருந்து ஹங்வெல்ல நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வாதுவ - வட தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிந்திவெல பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாய – எல்ல வீதியில், கார் ஒன்று, எதிர்த் திசையில் வந்த ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோவின் சாரதி, வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் எல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.