இலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள்! பின்னணியில் மறைந்துள்ள மாபியாக்கள்
இலங்கையில் தற்போது அதிகளவு பேசுப்பொருளாகியுள்ள ஒரு விடயம் தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான கொலைச் சம்பவங்கள்.
ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனின் ஆங்காங்கே அரங்கேறும் இந்த கொலைச் சம்பவங்கள் அவ்வப்போது மட்டும் ஊடகங்களால் பெரிதும் பேசப்படுவதும், மக்கள் பதற்றமடைவதும் அதற்கு உடனடியாக தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி போராட்டங்களை முன்னெடுப்பதும், பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுப்பதும் ஆகும்.
பொதுவான கருத்தொன்று எம்மத்தியில் உள்ளது. அதுதான் ‘‘இதுவும் கடந்து போகும்‘‘ என்பது போல இலங்கையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரமான கொலைச் சம்பவங்களும் கடந்து போகும் என்பதை போல் ஆகிவிட்டது.
அப்படி நம்மை கடந்து போன சில கொலைச் சம்பவங்களை இங்கு நான் உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம் என எண்ணுக்கின்றேன்.
சம்பவம் 1
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வு பிரிவில் கல்விகற்ற மாணவி ஒருவர் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலுக்கு அருகே நண்பகல் வேலையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் 2
பதுளை - ஹாலிஎல - உடுவர ஏழாம் கட்டைப்பகுதியில் 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை சீருடையில் இருக்கும் போதே கோடரியினால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்மை.
சம்பவம் 3
குருவிட்டை பொலிஸ் பிரிவின் – தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயதான திலினி யசோதா ஜயசூரிய மெனிகே எனும் பெண் கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டமை.
சம்பவம் 4
கண்டி அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் பெண்ணொருவர் வயல் நிலத்தின் சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை.
சம்பவம் 5
இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இளம் யுவதி சடலமாக மீட்கப்பட்டமை.
என ஒரு சில சம்பவங்களை மட்டுமே நான் இங்கு உங்களுக்கு நினைவுப்படுத்தியுள்ளேன். ஆனால் நான் நினைவுப்படுத்த அவசியமே இல்லாத உங்கள் நினைவுகளில் இருந்து நீக்காத சில கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் இந்த கட்டுரையில் பேசலாம்.
சம்பவம் 6
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் இஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை.
சம்பவம் 7
2015 புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை.
சம்பவம் 8
யாழ். சுழிபுரத்தில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்டமை
என இந்த கொலைச் சமபவங்கள் அனைத்தும் மிகவும் பேசுப்பொருளாகின. காரணம் இஷாலினியின் மரணத்தின் பின் ஒரு அரசியல்வாதியின் பெயர் பேசப்பட்டது என்பதனால் தானா?
வித்தியாவின் படுகொலையில் பின்னணியில் பல குற்றவாளிகள் தொடர்புபட்டிருந்தனர் என்பதனாலா?
அப்படியெனின் ரெஜினா, பாத்திமா ஆயிஷா போன்றவர்களின் கொலைச்சம்பவங்கள் பேசப்படுவதற்கான காரணம் அவர்கள் குழந்தைகள், என்பதனாலா?
ஆக ஒரு கொலை சம்பவத்தின் தீவிரம், அதன் பின்னணியில் இருக்கக்கூடிய பாரதூரமான விளைவுகள் எமக்கு முக்கியமல்ல. அந்த கணம் அந்த கொலையுடன் தொடர்புடைய வகையில் நாம் பேசி தீர்க்கக்கூடிய அரசியல், விடைதெரியாத கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக நாம் தேடக்கூடிய பதில்கள் என்பதிலா தங்கியுள்ளது என்ற கேள்வியை உங்களிடம் முன்வைக்கின்றேன்.
சரி, இனி இவ்வாறான கொடூர கொலைகளின் பின்னணியில் இலங்கையில் இருக்கக்கூடிய சட்ட அணுகுதல் தொடர்பில் சற்று நோக்குவோம்.
இலங்கையை எடுத்துக்கொண்டால் இவ்வாறு பெண்களுக்கு எதிராக பதிவாகும் ஏராளமான குற்றங்கள் இன்னமும் பதிவு செய்யப்படாதவையாக அமைகின்றது.
உதாரணமாக, 2019 இல் இலங்கையில் 1,779 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், அக்குற்றங்கள் தொடர்பாக 235 பிராதுக்களே (குற்றப்பத்திரிகைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கெதிரான வன்முறைகளில் இலங்கை அரசின் அணுகுதல் பற்றி நோக்குகின்ற போது இலங்கையில் 1833 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பெண்களைப் பலாத்காரம் செய்தல் பற்றிய சட்டம் இன்னமும் மாற்றப்படவில்லை.
நூறு ஆண்டுகளை கடந்தும் மாற்றம் செய்யப்படாத சட்டம் போதுமானது என்ற எண்ணக்கரு எத்தனை ஆரோக்கியமானது என்பது கேள்விக்குறியே.
எமது நாட்டில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை அதிகரித்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், அவருடைய பதவிக்காலத்தின் முதல் வருடத்தில், இப்பிரச்சினையை எதிர்ப்பதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு சிறியளவான ஏற்பாடுகளே இடம்பெற்றுள்ளன.
தொடர்ச்சியாக பதவிக்கு வருகின்ற அரசாங்கங்களைப் பார்க்கின்றபோது, இப்போக்கு இலங்கையில் தொடர்ச்சியாக நிலைத்திருக்குமொன்றாகின்றது.
நியதிச் சட்டங்களை இற்றைப்படுத்துவதோடு அரசின் வகிபாகம் முடிவுறுத்தப்படுவதில்லை. இத்தகையக் குற்றங்களை செய்பவர்களுக்கு எதிரான, உண்மையான நீதியினை வழங்குவதற்கான வெற்றிகரமான வழக்குத்தொடர்வானது பொலிஸ் மற்றும் வைத்திய உயர் வணிகர்கள் முதல் வழக்குத்தொடுனர்கள் மற்றும் நீதிபதிகள் வரை அரச பொறிமுறையின் பல்வேறு செயற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்புத் தேவைப்படுத்துகின்றது.
நாட்டில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குத்தொடர்தல்களை மேற்கொள்வதற்கான சட்டங்கள் போதாமையாக உள்ள அதேவேளை, கிடைக்கக்கூடியதாக உள்ள மட்டுப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி சில வழக்குத் தொடர்தல்கள் இடம்பெற்றுள்ளன.
தண்டனைக் கோவையில் உள்ள பாலியல் குற்றங்களுக்கான நிலையான திருத்தங்கள் கடைசியாக 1998 மற்றும் 1995 இலேயே (2006 இல் சிறியளவான சில மேலதிக திருத்தங்களுடன்) மேற்கொள்ளப்பட்டன.
2005 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 வருடங்களாகியுள்ள நிலையில், அதனைத் திருத்துவதற்கான கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டபோதிலும், இதுவரையில் அத்தகையதொரு திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
நியதிச்சட்ட பாலியல் வன்புணர்விற்கான குறைந்தபட்ச கட்டாயத் தண்டனை பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கானத் தண்டனை, தண்டனைக் கோவையின் பிரிவு 364 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண சந்தர்ப்பங்களில், பாலியல் வன்புணர்விற்கான தண்டனையாக 7 முதல் 20 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை அமைகின்றது,
அதாவது, நீதிமன்றமானது பாலியல் வன்புணர்வு புரிந்த ஒருவருக்கு 7 வருடத்திற்கு குறைந்த சிறைத் தண்டனை வழங்க முடியாது. ஆகவே, பாலியல் வன்புணர்விற்கான குறைந்தபட்ச கட்டாயத் தண்டனையாக 7 வருடங்கள் அமைகின்றது.
எவ்வாறெனினும், குறிப்பிட்ட அதே பிரிவு சில குறிப்பிட்ட தீவிரமான சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுவதுடன் அவை 10 முதல் 20 வருடங்கள் வரையான கடூழிய சிறைத்தண்டனையினால் தண்டிக்கப்பட வேண்டுமென தீவிரமானத் தண்டனைகளையும் குறிப்பிடுகின்றது.
இத்தீவிரமான சந்தர்ப்பங்களுள் பிரிவு 354 (2)(ஈ) அல்லது 18 வயதிற்கு கீழ்பட்ட பெண்ணொருவர் தொடர்பில் புரியப்படுகின்ற பாலியல் வன்புணர்வு என்பன உள்ளடக்கப்படுகின்றன.
அத்துடன் பெண் வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் உடனடி தீர்ப்பு வழங்கும் செயன்முறை அவசியம் ஆகும். வன்முறை நடந்து காலம் கடந்த பின் வழங்கப்படும் தீர்வுகள் வேறு பல சமூக பிரச்சினைகளை உருவாக்கலாம். இவ்வாறான வழக்குகளை முடிவுறுத்துவதிலுள்ள நீண்டகாலத் தாமதங்கள் இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெறுவதற்கு தூண்டுதலாக அமைகின்றது.
கிட்டதட்ட இவ்வாறு பதிவாகும் வழங்குகளில் தீர்ப்புகளை வழங்க 10, 15 வருடங்கள் ஆகிறது. காலம் கடந்து வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதே.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்புத்திட்டம் போதுமானதாக இல்லாமை
தண்டனைக்கான வழிகாட்டிகள் முரணானதாக இருத்தல்
குற்றங்களை புரிகின்ற குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளில் நிலையானத் தன்மை காணப்படுவதில்லை.
குற்றவாளிக்கு வழங்கப்படுகின்ற தண்டனை தனிநபரான நீதிபதியின் தனிப்பட்டக் கருத்துக்களை சார்ந்து அமைந்திருக்கக்கூடாது. ஐக்கிய இராச்சியத்தில், தண்டனை சபையானது நீதிபதிகள் பாலியல் குற்றங்களுக்கு தண்டனையளிக்கின்ற போது கவனத்திற்கொள்ள வேண்டிய விரிவான வழிகாட்டிகளை வரைந்துள்ளது.
நீதிபதிகளுக்கு சிறிதளவான தற்துணிபு காணப்பட்டபோதிலும் கூட, இத்தற்துணிவானது இக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு எல்லைக்கே பிரயோகிக்கப்படுதல் வேண்டும். இதனையொத்தவொரு வழிகாட்டி இலங்கைக்கும் பொருத்தமானதாக இருக்கும்.
குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பல சேவை நிலையங்கள் போதுமற்றதாக இருத்தல் முறைப்பாடுகளைச் செய்வதிலுள்ள சிக்கல்கள் உடன் தொடர்புடைய பிரச்சினைகளைக் கையாள்வதற்கான அரசியல் விருப்பின்மை ஓர் முக்கிய காரணமாகும்.
1998 ஆம் ஆண்டிலிருந்து தண்டனைக் கோவையிலுள்ள பாலியல் குற்றங்கள் திருத்தப்படாதிருப்பது, அப்போதிலிருந்து இலங்கையின் அரசியலமைப்பு நான்கு தடவைகள் நிலையானமுறையில் திருத்தப்பட்டுள்ள நிகழ்விலிருந்து நிலைநிறுத்தப்படுகின்றன.
அத்துடன், நாடாளுமன்றத்தில் மிகக் குறைவான பெண்கள் பிரதிநிதித்துவம் என்பதும் ஓர் காரணமாகும்.
சரி! மேற்குறிப்பிட்ட அத்துனை விடயங்களும் குற்றங்கள் நடந்த பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நாம் மற்றவர்களை இலகுவாக கைகாட்டி விட்டுச்செல்லும் காரணங்களாகும்.
அப்படியாயின் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகளைக் குறைக்க வேண்டுமானால் வன்முறைகளுக்குக் காரணமாக அமைகின்ற அடிப்படை காரணங்களை அடியோடு களைய வேண்டும்.
போதைப்பொருள் பாவனை, அதன் பின்னயில் மறைந்திருக்ககூடிய போதைப்பொருள் மாப்பியாக்கள் மற்றும் குடும்ப வறுமை, பொருளாதார நெருக்கடி, அதிகளவான சுமை அவை பணிச்சுமைகளான அமையலாம் வேறு பல இதர காரணிகளினாலும் ஏற்படலாம், இவற்றை நாம் அடிப்படையிலே கையாள வேண்டும். இந்த அடிப்படை காரணிகளில் நான் முன்னிலைப்படுத்துவது போதைப்பொருள் பாவனை, குடும்ப வறுமை, குடும்ப வன்முறை என்பவற்றையே.
மேற்குறிப்பிட்ட கொடூரமான கொலைச்சம்பவங்களின் பின்னணியின் ஆராயும் போது பெருமளவான குற்றவாளிகள் போதைப்பொருள் பாவனை உடையவர்களாக இருப்பதே ஆகும்.
எனவே பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான கொலைச்சம்பவங்களின் போது எதிர்ப்பினை வெளியிடும் நாம் பல மடங்கு போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும் செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதன்மூலமாக பாலியல் தொடர்பான பயமின்றி தனது நாளந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் பெண்களுக்கு காணப்பட வேண்டும் என்பதுடன், அத்தகையக் குற்றங்களுக்கான உண்மையான காரணங்களைக் கையாள்வதனூடாக மாத்திரமே இதனை சாத்தியப்படுத்த முடியும்.
இது அடையப்பெறுகின்ற போது மட்டுமே, அனைத்து பிரஜைகளினதும் சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நீதியான சமூகமொன்று நிலைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.