2027 வரவு செலவுத் திட்டம் : வாகன விலைகளில் செலுத்தும் தாக்கம்
வாகன இறக்குமதி தொழில்துறையில் அடிக்கடி விலைகள் ஏற்ற இறக்கங்களுக்க உள்ளாகும்போது தொழில்துறையை நிலையாகப் பேணுவது மிகவும் கடினமாகும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு நேற்றையதினம்(14.11.2026) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வாகனங்களின் விலையில் எந்தவொரு குறைவும் அல்லது அதிகரிப்பும் ஏற்படாது.
நிலையாகப் பேணுவது கடினம்
இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தற்போதுள்ள நடைமுறைகளையே தொடர்நதும் முன்னெடுப்பதற்கான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன இறக்குமதித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டமைப்புக்கள் மாற்றமின்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு தொழில்துறையாக நோக்கும்போது, இந்த நிலைத்தன்மை சாதகமான விடயமாகும். ஏனெனில், அடிக்கடி விலைகள் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும்போது, தொழில்துறையை நிலையாகப் பேணுவது மிகவும் கடினமாகும்.
கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் விலை அதிகரிப்புக்கள் இடம்பெற்றிருந்தாலும், இம்முறை விலை அதிகரிப்போ அல்லது குறைப்போ இன்றி தற்போதுள்ள நிலைமையைத் தொடர முடிவது தொழில்துறைக்கு சாதகமானதாகும்.
எனவே, வாகன இறக்குமதித் துறையைப் பொறுத்தவரையில், தற்போதைய நிலைமை தொடர்வதை ஒரு நல்ல விடயமாக பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.