எஸ்.ரி.எப். சுற்றிவளைப்புகளில் 10 பேர் சிக்கினர்
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக நான்கு மதுபான சுற்றிவளைப்புகளில் மட்டும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 209 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 720 லீற்றர் கோடா, ஒரு இரும்பு பீப்பாய், இரண்டு செப்புத்தடுகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு, மட்டக்குளிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 16 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு தொலைபேசி, 86 ஆயிரத்து 490 ரூபா பணம் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேபோன்று பேலியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு மாவத்தையில் 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துட்டுகெமுனு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை. கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுணுகம்வெஹெர பிரதேசத்தில் 38 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை, தங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகளுகமுவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் நாகுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை, கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டுத்
துப்பாக்கியுடன் 42, 43 வயதுகளையுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கஞ்சா சேனை ஒன்றும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.