தமிழரசுக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல் : சிவமோகன் ஆதங்கம்
தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(28.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ்
மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர்.
பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார். அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார்.

உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அது மர்மமாகவே இருக்கிறது. இது உளவாளிகளின் ஊடுருவல்.
திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் உள் நுழைக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையில் ஒருவர்.கேவலம் கெட்ட தேசியபபட்டியலில் இன்னொருவர்.
உங்களுக்கு துணிவிருந்தால் இந்த மக்களுக்கு முன்னால் பொதுக்குழுவை கூட்டுங்கள். நீங்களே தலைவராக வர முடியுமாக இருந்தால் பரீட்சித்துப் பாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.