கோட்டாபயவின் வீட்டை சுற்றி விசேட பாதுகாப்பு - பொலிஸ் மா அதிபர் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பகிரிவத்தை பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் இன்று (19) பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இன்று (19) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
விரைவில் நாடு திரும்பவுள்ள கோட்டாபய ராஜபக்ச
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விஜயம் தொடர்பில் அவரது செயலாளரிடம் கேட்டபோது, இன்னும் சில தினங்களில் அவர் இலங்கை வரவுள்தாக கூறினார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ பங்கு எதுவும் இல்லை எனவும், அவர் இலங்கை பிரஜை என்பதனால், வந்து செல்லும் திறன் கொண்டவர் எனவும் அலி சப்ரி கலந்துரையாடலில் மேலும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தாய்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையில் தற்போது கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் விசேட பாதுகாப்பு இடத்தில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.