வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட அறிவிப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 மே 2ஆம் திகதி முதல், புதிய அலுவலக இடத்தில், வழமையான அலுவலக நேரங்களான திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 முதல் மாலை 4.15 வரை சகல கொன்சியுலர் சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் மேலும், ‘சுஹுருபாய’ இலுள்ள புதிய கொன்சியுலர் அலுவலகத்தில், மின்னியல் ஆவண அத்தாட்சிப்படுத்தல் முறைமையை (e-DAS) மாற்றம் செய்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுப்பதற்காக, கொழும்பிலுள்ள கொன்சியுலர் பிரிவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகள், 2024 ஏப்ரல் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
ஆனபோதிலும், இவ்வாறு மின்னியல் முறைமை (e-DAS) மாற்றம் செய்யப்படும் காலத்தில், யாழ்ப்பாணம், திருகோணமலை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய கொன்சியுலர் சேவைகள் அலுவலக நேரங்களில் வழமைபோல இயங்கும்.
பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்களில் பொதுமக்கள் தமது அத்தாட்சிப்படுத்துவதற்கான ஆவணங்களை வழமைபோல சமர்ப்பிக்கலாம் என்பதுடன், அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள், 2024 வியாழக்கிழமை, மே, 2ஆம் திகதி மட்டுமே விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும்.
எந்தவொரு வசதியீனங்களையும் தவிர்ப்பதற்காக, பொதுமக்கள் அவசரமாக அத்தாட்சிப்படுத்தப்படவேண்டிய தமது விண்ணப்பங்களை, கொழும்பிலுள்ள கொன்சியுலர் அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு பிராந்திய அலுவலகத்திலோ, 2024, ஏப்ரல் 26ஆம் திகதி மாலை 4.15 இற்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |