பாலிற் பொங்கிய கிரிபத் இரத்த சோறான கதை
முள்ளிய்க்காலுக்கு முன் பாற்சோறாயிருந்த கிரிபத் முள்ளிவாய்க்காலின் பின் இரத்தச் சோறானது. சுமாராக ஒன்றரை இலட்சம் தமிழரைக் கொன்று குவித்து வடித்தெடுத்த இரத்தப் பானைகளில் கிரிபத்தைப் பொங்கியெடுத்து வெற்றி விழாக் கொண்டாடி மகிழ்ந்த போது கிரிபத் இரத்தச் சோறாய் மாறியது. மகிந்தவின் கை முதலாவது இரத்தக் குடத்தைப் பொங்கற் பானையுள் வார்த்தது. கோட்டாவின் கை இரண்டாவது இரத்தக் குடத்தை வார்த்தது.
இனப்படுகொலைக்குத் தேவைப்பட்ட படையினரைத் திரட்டிக் கொடுத்த ஜேவிபி தலைவர் அநுரகுமார, அதன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அன்றைய பரப்புரைப் பொறுப்பாளர் விமல் வீரவன்ஸ என்போரின் கரங்களும் இரத்தம் தோய்ந்தவாறு பானைக்குள் இரத்தம் வார்த்தனர். ஜேவிபி படைக்குத் திரட்டிக்கொடுத்த 60, 000 சிங்களச் சிப்பாய்களும் இரத்தாற்றின் நாயகர்கள் தான்.
இவர்கள் அனைவரோடும் இணைந்து கிரிபத் உண்டு மகிழ்ந்து கொண்டாடிய தமிழ்ப் புல்லுருவிகளும் இரத்தவாடை வீசும் பாவக் கிரகங்கள்தான். இத்தகைய தமிழ் இரத்த உறிஞ்சிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. அமைச்சர்களுக்குக் கடையடைப்பு, கறுப்புக் கொடி காட்டிய தமிழ் மண் இன்று சிங்களத் தலைவர்களைத் தோளிற் காவியவாறு கிரிபத் இரத்தச் சோறூட்டிக் கொண்டாடும் அவலத்தை அடைந்துள்ளது.
ஆயினும் காலம் மாறும். ஒவ்வொரு இனங்களும் ஒவ்வொரு சமூகங்களும் தமக்கான அடையாளங்களை தம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் வெளிப்படுத்துவர். அதுவே இனத்திற்கான அல்லது சமூகத்திற்கான அடையாளமாக இறுக்கமாக பேணப்படும். சிங்களவர்களுக்கு கிரிபத் (பால் சோறு) தமிழர்களுக்கு சர்க்கரைப் பொங்கல். அவ்வாறே தமிழர்களுக்கு வாழைப் பழம் முஸ்லிம்களுக்கு பேரிச்சம் பழம்.
முள்ளிய்க்கால் படுகொலை
தமிழர்களுக்கு வாழை முஸ்லிம்களுக்கு பேரிச்சை. பிரதேச ரீதியாக ஈழத் தமிழர்களின் அடையாளம் பனை சிங்களவர்களுக்கு தித்துல், தென்னை என்பன உணவின் அடையாளம். இந்த அடையாளங்களை எந்த சமூகத்தினரும் ஒருவர்க்கொருவர் எதிரானதாக பார்ப்பதில்லை.
ஆனால் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டு படுகொலை மூலம் பெற்ற வெற்றியை சிங்கள மக்கள் தெருக்களிலே பாற்சோறு கொடுத்து கொண்டாடியதன் பின்னர் அந்தப் பாற்சோறு தமிழர்களுக்கு ரத்தச் சோறாக மாறியது. சிங்களவர்களின் சின்னம் சிங்கம்.
அதுவே அவர்களின் கொடி. ஆனால் தமிழர்களுக்கு புலி, மீன், வாள், நந்தி எனப் பிரதேச ரீதியான சின்னங்களும் கொடிகளும் இருந்தன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள அரசின் தமிழின விரோத செயலால் தமிழ் மக்கள் சிங்கக் கொடியை ஏற்க தயாராக இல்லை.
அதன் படிப்பாடுதான் 1957 சுதந்திர தினத்தன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்த சிங்கக் கொடியை அகற்றி கறுப்பு கொடியை கட்டிக் கொண்டிருந்த நடராஜன் என்ற இளைஞன் பொலிஸாரின் அனுசரணையுடன் சிங்கள காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு 8 மாதங்களுக்கு முன் சிங்கள பொலிஸாரின் ஆதரவுடன் அம்பாறையில் பாவித் தமிழ்க் குடிமக்கள் மீது சிங்களக்காடையர் பாரிய இனப்படுகொலைத் தாக்குதலை முதல் முறையாக மேற்கொண்டனர்.
இவையே தமிழ் மக்களின் வரலாற்றில் முதலாவது பெரிய பிரிகோட்டை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஒரு பேரழிவை சந்தித்து சொல்லனா துன்பத்தை அனுபவித்து ஒன்றரை இலட்சத்தை தாண்டிய படுகொலையின் பின்பு அவ்வாறு கொல்லப்பட்ட உடலங்களைத் தாண்டி அந்த மண்ணில் இருந்து மக்கள் வெளியேறினர்.
உணவின்றி ஒட்டிய வயிற்றோடு குற்றுயிரும் குலையுயிருமாய் வந்த மக்களை முகாம்களிலேயே முள்வேலிக்குள் அடைத்து வைத்து முதலிற் தமது பாற்சோறு கொடுத்து வெற்றியை கொண்டாடினர் கொழும்பு நகரம் மற்றும் சிங்கள தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பால்சோறு வழங்கிக் குதூகலிக்கும் சிங்கள மக்களை ஒளிப்படங்களாக காட்டிய போது ஈழத் தமிழர்களின் நெஞ்சங்களில் அது ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தியது. அந்த வெஞ்சினத்தில் அவர்களுக்கு அப்போது பால்சோறு இரத்தசோறாய் காட்சியளித்தது.
அந்த இரத்தசோற்றுக்கு எதிராக தமிழ் மக்கள் தம்மை தயார்படுத்தி அதற்கு எதிர்வினையாற்றுவதற்கு தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு மே மாதமும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தமிழ் மக்கள் வாழும் உலகப் பரப்பெங்கும் வழங்கி தாமும் அருந்தி அதனை ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பண்பாட்டு நிகழ்வாக இன்று மாற்றிவிட்டார்கள்.
மாற்றத்தை நோக்கிய பயணம்
இத்தகைய பண்பாட்டிகளுக்குள் இருக்கும் தமிழ் மக்களை ஒன்றிணைக்க சிங்கள தேசத்தின் எத்தகைய தர்மவான்கள் வந்தாலும் தமிழ் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யாமல் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாது. இந்த கிரிபத்துக்கும் (பால் சோற்றுக்கும்) முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கும் இடையேயான இடைவெளி எவ்வாறு இருக்கிறதோ அதுவே ஈழத் தமிழர்களுக்கும் சிங்கள தேசத்துக்குமான பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தருணத்திற்தான் "நீங்க வேறு நாடய்யா நாங்க வேறு நாடய்யா".
என்ற விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடல் வரிகள் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றன. தமிழ் மக்களின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. அதனை விரும்பி கேட்கவும் தூண்டி இருக்கிறது.
இவ்வாறு தமிழ் மக்கள் எதிர்நிலை எடுப்பதற்கும் எதிர்த்து நிற்பதற்கும் தமிழ்த் தேசியம் மிகக் கடும்போக்கில் பயணிப்பதற்கும் சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களே தொடர்ந்து காரணமாக இருக்கிறார்கள்.
இத்தகைய நிகழ் போக்குக்கு சிங்கள தேசத்தின் இடதுசாரிகள் என்று சொல்லப்படும் ஜேவிபியும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இன்றைய மாற்றத்தை விரும்புகின்ற, ஊழலை எதிர்த்து புதிய சமூகத்தைக் கட்டப் போகிறேன் என்று சொல்லுகின்ற அனுரகுமார திசாநாயக்காவும் விதிவிலக்கல்ல. அவர் இன்றளவும்கூட தமிழ் மக்களுக்கான தீர்வைப் பற்றி எதனையுமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மாறாக இலங்கை அரசியல் யாப்புக்குள் யாவரும் சமமாக சமத்துவமாக ஓரின மக்களாக வாழலாம் என்கிறார் அதாவது தமிழ் மக்களை அளவால் பெரிய சிங்கள தேசிய இனத்திற்குள் கரைத்து விடுவதே அவருடைய விருப்பாகவும் செயலாகவும் அவருடைய அறிவிப்பாகவும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்க.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் மக்களின் காவலர்களான தேசத்தின் தலைவர் கொல்லப்பட்டதை அவர்கள் வெற்றிநாளாக கொண்டாடி மேடைகளிலும் தெருக்களிலும் சிங்கக்கொடியை ஏந்தி வலம் வந்த சிங்கள தேசத்தின் மக்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்தார்களா அல்லது புரியவில்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் அவை தமிழ் மக்களை மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது என்பதுதான் உண்மை.
சம்பந்தனின் மரணம்
இத்தகைய கொண்டாட்டங்களைச் செய்பவர்களோடு ஓடுகாலித் தமிழ் தலைமைகளும் பாற்சோறு உண்டதையும் சிங்கக் கொடியை ஏந்தி மேடையிலேயே அசைத்தமையையும் தமிழ் மக்கள் கண்டனர். மேடையிலே ராஜபக்சக்களுடன் சிங்கக் கொடி ஏந்திய சம்பந்தனை மக்கள் மன்னிக்க தயாராக இருக்கவில்லை. சம்பந்தன் மரணித்த போது மரண வீட்டுக்குச் செல்லாமல் மரணத்தின் பின்னரும் சம்பந்தனை தமிழ் மக்கள் கண்டித்தனர். இதைத் தமிழ் மக்களின் ஆத்மார்த்த ரீதியான கோபம், ஆத்திரம், வஞ்சம் தீர்ப்பு என்று சொல்வதே பொருந்தும்.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொள்வதற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வெற்றியை சிங்கள தேசம் அடைவதற்கும் ஏதுவாக 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களப் படையை திரட்டி கொடுத்தது அநுரகுமார தலைமையிலான இந்த ஜேவிபி என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்திட மாட்டார்கள். இப்போது இருக்கின்ற அரசியல் நிலைமைகளில் ஒரு சிறிய சுயநலக் கும்பல் எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கும் ஓடுகாலித் தமிழர் சிலர் அரசியலில் சிறிதுகாலம் கூசா ஏந்தினாலும் அது நிலைக்காது.
காலம் மாறும். அது தமிழ் மக்களிடம் இருக்கின்ற வரலாற்று கசப்புக்களினால் விரைவில் அடித்து நொறுக்கப்பட்டு விடும் என்பது இன்னொரு பக்க உண்மையாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இனவாதத்தைக் கக்கிய ஜேவிபி கட்சி இப்போது அந்த இனவாதத்தை முற்று முழுதாக கைவிட்டுவிட்டது என்று போதிப்பதை தமிழ் மக்கள் உத்திராட்ச பூனைகளாகவே பார்க்கின்றனர்.
இந்த உருத்திராட்ச பூனைகளின் பின்னே பயணிக்கும் தமிழ்ப் புல்லுருவிகளை தமிழ் மக்கள் ஒரு சுயநல கூட்டம் என்றே பார்க்கின்றனர். இப்படி இருக்கும் இந்தக் கூட்டத்தை சம்பந்தன் வழியில் தமிழ் மக்கள் தண்டிப்பார்கள் என்பதும் உண்மை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 12 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.