நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சை: பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் ஒரு சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை வினாத்தாள் போக்குவரத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், பொலிஸார் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சை நடைபெறும் காலத்தில் வீதிகளை மறித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
இன்று நாடளவிய ரீதியில் நீண்ட நேர மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மத்தியில் கா.பொ.த சாதாரண பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
மன்னார்
க.பொ.த சாதாரண பரீட்சை இன்று (23) ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் சுகாதார வழி காட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 31 பரீட்சை மையங்களில் 3642 பரீட்சாத்திகள் க .பொ
.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : ஆசிக்
வவுனியா
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்றையதினம் பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தன.
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு வவுனியாவில் 4956 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்பு காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 517496 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 407129 பாடசாலை பரீட்சார்த்திகளும்110367 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : சதீஸ்
மட்டக்களப்பு
பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் சுமுகமான முறையில் ஆரம்பமானது.
கொவிட், பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியிலும் இன்றைய தினம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலைகளுக்கு பரீட்சைக்காக வருகைதந்ததை காணமுடிந்தாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயத்தில் க.பொ.த.சாதாரணப் பரீட்சைக்காக 14 இணைப்பு நிலையங்களும்,125 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இப்பரீட்சைக்கு மாவட்டத்தில் இருந்து 17416 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இன்றைய தினம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : குமார்
மலையகம்
மலையக மாணவர்களும் இன்றைய தினம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றினர்.
மலையகத்தில் காணப்பட்ட மழையுடனான காலநிலைக்கு மத்தியிலும் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்தனர்.
தற்போதய நாட்டின் நெருக்கடியான பொருளாதார சூழலுக்கு மத்தியிலும் இந்த மாணவர்கள் தமது வாழ்க்கையின் முதல் படியை கடப்பதற்காக பரீட்சை நிலையத்திற்கு அருகிலும் கற்றல் செயற்பாடுகளை இறுதி நிமிடம் வரை முன்னெடுத்ததை காணக்கூடியதாக இருந்தது.
இன்று முதல் நாள் சமய பாடம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதுடன் இந்த பரீட்சையானது வருகின்ற புதன்கிழமை நிறைவடைய உள்ளது.
செய்தியாளர் : திருமால்