தாக்குதலின் நிலைப்பாட்டை எகிப்திடம் எடுத்துரைக்கும் இஸ்ரேல்: வலுக்கும் கண்டனங்கள்
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் தமது நாட்டை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலின் நிலைப்பாடு தொடர்பில் எகிப்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தியதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கட்ஸ்(Israel Katz) தெரிவித்துள்ளார்.
"ஈரானும் அதன் ஆதரவாளர்களும் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படும் வகையில் செயற்படுவதாகவும் கட்ஸ் கூறியுள்ளார்.
"ஈரானின் ஆக்கிரமிப்பைத் தடுக்க பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும், உலகின் பிற பகுதிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
எகிப்துடனான உறவு முக்கியமானது, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்" என வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
Just spoke with Egyptian Foreign Minister Sameh Shoukry and emphasized Israel's right to self-defence against Iran's unprecedented aggression. I stressed that Iran and its proxies are the central threat to stability in the Middle East. The moderate countries in the region, along… pic.twitter.com/JzvNIji7Xt
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) April 14, 2024
இனப்படுகொலை அரசு
இந்நிலையில் ஈரானின் - தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் உலக ஆய்வுகள் பீடத்தின் பேராசிரியரான ஃபுவாட் இசாடி, இஸ்ரேல் மீதான தாக்குதல்களைப் பற்றி ஈரானியர்களின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
காசாவில் இருந்து வெளிவரும் செய்திகளை ஈரானியர்கள் அறிந்ததாகவும், இஸ்ரேலியர்களுக்கு போர் நெறிமுறைகள் இல்லை என்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
“அருகில் நீங்கள் ஒரு இனப்படுகொலை அரசைக் கொண்டிருக்கும்போது, மக்கள் அதை நினைத்து கவலைப்படுகிறார்கள். அது ஏற்புடையது அல்ல.
இதில் மகிழ்வான செய்தி என்னவென்றால், ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக உள்ளது என்பதுவே. அதுதான் நேற்றிரவு நடந்த தாக்குதல்.
இஸ்ரேலுக்கு பின்னடைவு
ஈரானின் நிலப்பரப்பை அந்நாட்டால் பாதுகாக்க முடியும் என்பதில் ஈரானியர்கள் இப்போது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பெரும்பாலான ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள்ளே நுழைந்தன.
இதன் விளைவாக ஈரானை இஸ்ரேல் தாக்கலாம். ஆனால் அதன் விளைவானது இஸ்ரேலுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும்." என கூறியுள்ளார்.
ஈரானின் தாக்குதலை எதிர்கொண்ட நிலையில், தனது வெற்றிகரமான வான் பாதுகாப்பு அமைப்பும், நட்பு நாடுகளும், தமது நாட்டை நோக்கி ஏவப்பட்ட 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் 99 சதவீதத்தை செயலிழக்கச் செய்ததாக, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்ரேலின் எதிர்-தாக்குதல் சாத்தியம் என்ற அச்சத்தில், பிராந்திய பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஈரானின் வெட்கக்கேடான தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த இராஜதந்திர பதிலை வழங்க, ஒருங்கிணைக்க" ஏழு மேம்பட்ட ஜனநாயக நாடுகளின் குழுவின் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கூட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஈரானின் தாக்குதல் ஒரு பரந்த இராணுவ மோதலாக மாறுவதை பைடன் நிர்வாகம் விரும்பவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி இராணுவத் தாக்குதல்
இந்நிலையில் இந்த மாத ஆரம்பத்தில் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரான் 170 ட்ரோன்கள், 30க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகள் மற்றும் 120க்கும் மேற்பட்ட போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என்று இஸ்ரேல் கூறியது.
ஞாயிற்றுக்கிழமை காலைக்குள், தாக்குதல் முடிந்துவிட்டதாகவும், இஸ்ரேல் தனது வான்வெளியை மீண்டும் திறந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.
ஈரானின், 1979 இஸ்லாமியப் புரட்சியிலிருந்து பல தசாப்தங்களாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகை இருந்தபோதிலும், ஈரான் இஸ்ரேல் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
இதற்கமைய நீண்ட தூர ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் குறுகிய தூர ரொக்கெட்டுகள் உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அமைப்புகளை உள்ளடக்கிய பல அடுக்கு வான்-பாதுகாப்பு வலையமைப்பை இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன் பல ஆண்டுகளாக நிறுவி வந்துள்ளது.
காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டிருந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் பிற படைகளுடன் இணைந்து அந்த அமைப்பு, அழிவுகரமான தாக்குதலை முறியடிக்க உதவியது.
லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு போராளிக் குழுக்களும் ஈரானால் ஆதரிக்கப்படுகின்றன. இதற்கிடையில் ஈரான் 300 க்கும் மேற்பட்ட தாக்குதல் கருவிகளில் 99% மானவை இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ரியர் அட்ம் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.
இஸ்ரேல், இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்குமா என்ற கேள்விக்கு, தமது நாடு தனது குடிமக்களைப் பாதுகாக்கத் தேவையானதைச் செய்யும் என்று ஹகாரி கூறியுள்ளார்.
ஈரானின் ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் எதுவும் இஸ்ரேலை அடையவில்லை என்றும், சில போலிஸ்டிக் ஏவுகணைகள் மட்டுமே வீழ்ந்து வெடித்ததாகவும் ஹகாரி கூறினார்.
ஈரானின் க்ரூஸ் ஏவுகணைகளில் 25 ஏவுகணைகள் இஸ்ரேலிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய விமானப்படை தளத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக ஹகாரி கூறினார்,
ஆனால் அது இன்னும் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். தெற்கு இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் 7 வயது சிறுமி பலத்த காயம் அடைந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு X இல் ஒரு குறுகிய செய்தியை வெளியிட்டார்,
"நாங்கள் இடைமறித்தோம். தடுத்தோம். ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் முகமது ஹொசைன் பகேரி, தமது நாட்டின் இந்த நடவடிக்கை முடிந்துவிட்டதாக, அரசு நடத்தும் IRNA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையை தொடரும் எண்ணம் தங்களுக்கு இல்லை," என்றும்
அவர் கூறியுள்ளார்.
ஈரானிய தாக்குதலை முறியடித்தமை, ஹமாசுக்கு எதிரான போரின் மத்தியில்,
இஸ்ரேலின் பிம்பத்தை மீட்டெடுக்க உதவியுள்ளது.
அதே வேளையில், இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பது பிராந்தியத்திலும்
மேற்கத்திய நாடுகளிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |