இலங்கையில் அதிக அபாயம் உள்ள பல பகுதிகள் அடையாளம்! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
இன்று முதல் டெங்கு அதிக அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு நுளம்பு ஒழிப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவின் ஆலோசகர் வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
டெங்கு அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம்
நாட்டில் 43 சுகாதார வைத்திய அலுவலர் பிரிவுகள் டெங்கு அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 26,071 ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, டெங்கு தொடர்பான 13 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நுளம்புக்கள் பரவுவதை தடுக்க, பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பிரஷிலா சமரவீர வலியுறுத்தியுள்ளார்.