வவுனியாவில் போதைப்பொருள் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட கூட்டம் (Video)
வவுனியாவில் போதைப் பொருளை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டம் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இடம்பெறும் போதைப் பொருள் பாவனை, போதைப் பொருள் விற்பனை தொடர்பாகவும் அது தொடர்பில் பொலிஸார் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மந்த நிலையில் நடவடிக்கைகள்
இதன்போது பூவரசன்குளம், ஈஸ்வரிபுரம், மரையடித்தகுளம் உள்ளிட்ட பல கிராமங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதுமட்டுமன்றி போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடங்கள் தொடர்பாகவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், குறித்த போதைப் பொருள் பாவனை தொடர்பில் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகள் மந்த கதியில் உள்ளதாகவும் பொலிஸார் பற்றாக்குறை உள்ள போதும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், மக்களது பிரச்சனைகளை தமக்கு முன்வைக்குமாறும் தெரிவித்துடன் தனது தொலைபேசி இலக்கத்தையும் பொது அமைப்புக்களுக்கும் மக்களுக்கும் வழங்கியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், கிராம அலுவலர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |