அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலாளர் விசேட சந்திப்பு
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலுக்கு இணையாக, அமைச்சுக்களின் செயலாளர்களின் செயற்றிறனை மதிப்பீடு செய்வதற்கான செயற்றிறன் உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டன.
பணிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள்
அத்துடன், இந்தச் செயற்றிறன்களை வருடத்துக்கு இருமுறை மதிப்பீடு செய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு அமைச்சுக்கும் வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் மூலதனச் செலவுக்கு எவ்வாறு ஒதுக்கப்பட்டது, செயற்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இந்த வருடத்துக்குள் நிறைவடைய வேண்டிய திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
முதலீடுகளின் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களைத் தாமதமின்றி ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாகச் செய்துகொடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அமைச்சரவையின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித் ஆகியோருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

