கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்கு அதிரடி உத்தரவு
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
விசேட சட்ட திருத்த ஆலோசனை
இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான சட்டத் திருத்த வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு எடுக்கும் காலத்தை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இச்செயல்முறையின் போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வழக்குகளை முன்னெடுக்கும் போது சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஜயவீர விளக்கமளித்தார். கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதற்கும், வழக்குத் தடயப் பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதற்குமான அனைத்து வழிகளையும் அடைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.
முன்மொழியப்பட்ட சட்டமூலம்
கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்முறைகளின் தற்போதைய நிலை மற்றும் அங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரின் தலையீட்டுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்தார்.

அத்துடன், இச்செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை, திருத்தங்களுடன் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ஆர்.ஆர்.ஜி. ஸ்ரீயந்த அமரரத்ன, பிரதி அரச பகுப்பாய்வாளர் கே.ஏ.டி.பி. கொடிதுவக்கு ஆகியோரும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (போதைப்பொருள் ஒழிப்பு) அசோக தர்மசேன, பிரதிப் பொலிஸ்மா அதிபர் (சட்டம்) ஜாலிய சேனாரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றவியல்) கே.ஏ.ஜே. கொடிதுவக்கு ஆகியோருடன், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, நீதிச் சேவை ஆணைக்குழு, சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam