கடவுச்சீட்டுகளை விரைவாக பெற்றுக்கொள்ள சிறப்பு வசதி
வெளிநாட்டு ஊழியர்களின் கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்கான சிறப்பு பகுதி திறக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்தில் இந்த சிறப்பு பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டமாக நேற்று (22) இந்த பகுதி திறக்கப்பட்டதுடன், அதன் வெற்றியைக் கருத்தில் கொண்டு இன்று (23) முதல் அனைத்து வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல சிரமங்களை தவிர்க்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்
இதன்படி, வெளிநாட்டு வேலைக்காகப் புறப்படுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகளை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தை திணைக்களத்தின் இந்த விசேட பகுதியில் சமர்ப்பித்து, தமது வெளிநாட்டுக் கடவுச்சீட்டை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையத்தில் விசேட நுழைவு வாயில் திறக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.