தையிட்டி நில மீட்பு குறித்து விசேட கலந்துரையாடல்
தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (15.04.2026) யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது, தையிட்டி நில உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தினர்.
கலந்துரையாடல்
கடந்த சனிக்கிழமை அமைச்சர் சந்திரசேகரன் அவர்களால் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், விகாரை அமைந்துள்ள காணி தொடர்பில் நிலவும் மௌனம் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் நில விடுவிப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் அதேவேளை, மறுபுறம் இந்தச் சட்டவிரோத விகாரையை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பலமான சட்ட மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை இங்கு உரையாற்றியவர்கள் வலியுறுத்தினர்.
அடுத்தகட்ட நகர்வுகள்
இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்வு நிலைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் வி. மணிவண்ணன் மற்றும் சட்டத்தரணி க.சுகாஸ் ஆகியோர் பங்கேற்று அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

இவர்களுடன் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஆவண ரீதியான மற்றும் அறவழிப் போராட்ட வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
முடிவில், அமைச்சரின் வாக்குறுதிகள் வெறும் காலங்கடத்தும் தந்திரமா அல்லது உண்மையான தீர்வா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, விகாரையை நிலைநிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கப் போவதில்லை என ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டது.
அத்துடன், நிலமிழந்த மக்களின் உரிமைகளுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சிவில் சமூகத்துடன் இணைந்து ஒருமித்த குரலில் போராடுவது என்றும் இக்கூட்டத்தில் உறுதியெடுக்கப்பட்டது.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri