பாடசாலை மாணவர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் நேற்று(15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
முக்கிய தீர்மானங்கள்
இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களுக்கு முடி வெட்டுவது தொடர்பாகவும், சமூகத்தில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும், அழகக சங்க உரிமையாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளும் பேசப்பட்டுள்ளது.

அழகக உரிமையாளர்கள் பாடசாலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவது தொடர்பாக ஏற்றுக்கொள்வதாக உடன்பட்டிருந்ததுடன், பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதாக அதிபர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் விஸ்வலிங்கம் விஷ்ணுகரன், முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வெ.றொபின்சன், புதுக்குடியிருப்பு பிரதேச அழகக சங்கத்தின் தலைவர் ம.யோகதாஸ், அழகக சங்கங்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சிகை அலங்கார கடை உரிமையாளர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

