மன்னாரில் மணல் அகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (10) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் மற்றும் பிரஜைகள் குழுவின் தலைவர், கடற்படையினர் ,பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கள விஜயம்
இதன்பொது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டபூர்வமான மற்றும் சட்ட விரோதமான மணல் அகழ்வு சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் சிலவற்றை தற்காலிகமாக இடை நிறுத்துவது என்றும் அரசாங்க அதிபர் தலைமையில் மணல் அகழ்வு செய்யப்படுகின்ற இடங்களை கள விஜயம் மேற்கொண்டதன் பின்னர் அனுமதி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து தனி நபர்களால் மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதை தடுப்பதற்காக சில திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதாகவம் அவர்களுக்கான அனுமதி பத்திரங்களை உடனடியாக இரத்து செய்வதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணல் அகழ்வு போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வேறு மாவட்டத்தில் இருந்து வழங்கும் போது A32 பாதையில் அனுமத்திரம் வழங்க முடியாது எனவும் இவ்வாறு வழங்குவதால் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.