உணவுப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்: கணபதிப்பிள்ளை மகேசன்
உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலைமையினை ஆராயும் நோக்குடனான ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
தற்போதைய நிலை
உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலைமையினை ஆராயும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் மாவட்ட அடிப்படையில் நேரடி கள ஆய்வினை மேற்கொள்ள ஐ.நா. உயர் அதிகாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு விஐயம் செய்திருந்தனர்.
இதன் போது யாழ். மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதுடன், விவசாயம், கால்நடை, மீன்பிடி மற்றும் போஷாக்கு சம்மந்தமான தற்போதைய நடைமுறைப் பிரச்சினைகளான இரசாயன உரப்பற்றாக்குறை, எரிபொருள், விதைத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, சந்தைப்படுத்தல் மேற்கொள்ளமுடியாமை மற்றும் கால்நடைகளின் உணவின் விலை அதிகரித்தமை மற்றும் போஷாக்கு மட்டம் குறைவடைந்தமையும், மீன்பிடிக்கான எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், அண்ணளவாக 20 வீதமான பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டம் குறைவடைந்துள்ளதாகவும், சமுர்த்திப் பயனாளிகளின் விபரம் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய உணவுப்பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட சமுர்த்தி
பணிப்பாளர், விவசாய அமைச்சின் அதிகாரிகள், யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகள்,
விவசாய, கால்நடை அபிவிருத்தி, கடற்றொழில் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.



