மட்டக்களப்பு மாநகர சபையின் முக்கிய தீர்மானங்கள்(Photo)
மட்டக்களப்பு மாநகர சபையின் 62வது சபை அமர்வு நேற்று(07) மாநகர சபா மண்டபத்தில் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சபை அமர்வில், மட்டக்களப்பு புகையிரத குறுக்கு வீதியானது புனரமைக்கப்பட்டதில் சில செலவீனங்களில் மதிப்பீட்டு தொகையினையும் பார்க்க மேலதிகமாக 300,000 ரூபா காணப்படுவதால் அந்த மேலதிகமாக செலவு செய்த தொகையினை பொறியியலாளர் செலுத்த வேண்டும் என பிரேரணை கொணடுவரப்பட்டபோது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
மக்களின் பாவனைக்காக செய்யப்பட்ட இந்த வேலைக்கு மேலதிக செலவினம் ஏற்பட்டுள்ளது. இதனை தனியொரு நபர் மீது செலுத்துவது முறையற்றது எனவே அதற்கு பொறுப்பான அத்தனை உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்க வேண்டும் இல்லை எனில் மாநகரசபையின் நிதியில் இவற்றை செலுத்த வேண்டுமென உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை
மட்டக்களப்பு மாநகர சபைக்குள் ஏற்கனவே உள்ள டீசல் நிரப்பு பகுதியில் பெடரோல் நிரப்பு தாங்கியையும் அமைப்பதற்கான முன்மொழிவும் முதல்வரினால் முன்வைக்கப்பட்டு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மாநகரில் எரிபொருள் விநியோகத்தினை சீர்செய்ய கலந்துரையாட வேண்டும் என மாநகரசபை உறுப்பினர் ஜோன்பிள்ளையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அத்துடன் எரிபொருளுக்கான பெண்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் தற்காலிகமான மலசலகூடம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மாநகரசபை உறுப்பினர் சசிகலா வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு முறையான ஒரு செயல்பாடு மூலமாக எரிபொருள் வழங்குவது தொடர்பாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் இதன்போது உரையாடபட்டது.
சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 8 தடவைகள் குறித்த சில பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு அதற்கான முன்மொழிவு சபையில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த போக்குவரத்து திட்டத்தில் பொதுமக்களுக்கு 50 ரூபாயும் பாடசாலை மாணவர்களுக்கு 40 ரூபாய் அறவிடுவதாகவும். அதே நேரத்தில் தற்பொழுது ஆரம்பிக்க இருக்கும் இந்த திட்டத்திற்கு எரிபொருளை முதல் கட்டமாக மாநகரசபையின் மேலதிக எரிபொருளில் இருந்து வழங்குவதற்கு முன்மொழியப்பட்டது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக இந்த திட்டத்தினை முக்கியமான சில பகுதிகளுக்கும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.
விவசாயிகளுக்கு எரிபொருள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை ஆரம்பமாகிய நடைபெற்றுவரும் நிலையில் விவசாயிகளுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்னெடுத்துவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னுரிமையடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை காலம் தாண்டிச்செல்லும் நிலையில் எரிபொருள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அறுவடை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
முறையான ஒழுங்குபடுத்தலின் கீழ் நேற்று(07) மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக ஏக்கருக்கு 15 லீட்டர் என 3000 லீட்டர் டீசல்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் நன்மை கருதி முதன்மையடிப்படையில் எரிபொருட்களை தொடர்ச்சியாக
வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.