சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம் - வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
2026ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள் முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (21.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகையில், இச்சிறுபோக அறுவடை ஆரம்பித்தது முதல் அரசாங்கத்தின் மூலம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அறுவடைகளை முடித்து நெல்லை வைத்திருக்கும் நிலையில், அவர்கள் அதை விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருப்பதால் அரசாங்கத்தினால் தற்போது புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி, விவசாயிகள் வைத்திருக்கும் நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே எமது மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்து, அதனைச் சேமித்து அரிசியாக்குவதற்கான வசதிகளை வைத்திருந்தால் உடனடியாக இந்தச் செயல் திட்டத்தில் இணைந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

நிர்ணயித்த விலையில் கொள்முதல்
இத்திட்டத்தின் கீழ் சந்தையில் நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்யும் பொருட்டு 1 kg வெள்ளை நாடு நெல் 120 ரூபாவிற்கும், சிவப்பு நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும் அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அதிகபட்சமாக 14% ஆகவும் பதர் நெல்லின் அளவு 9%க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
அத்துடன் நிலப்பரப்பின் அடிப்படையில் 1 ஏக்கர் வரை பயிர்செய்த விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சமாக 1000 kg நெல்லும், 1 முதல் 3 ஏக்கர் வரை பயிர் செய்தவர்களிடம் 2500 kg நெல்லும், 3 முதல் 5 ஏக்கர் வரை பயிர் செய்தவர்களிடம் 4000 kg நெல்லும் அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 மெட்ரிக் தொன் வரை அரைக்கும் திறன் கொண்ட, மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாய் வரை வட்டியற்ற கடன் ஒதுக்கப்பட்டு, ஆரம்ப முன்பணமாக 25% விடுவிக்கப்பட்டு மீதித் தொகை 3 சம தவனைகளில் வழங்கப்படும்.

அரசினால் வழங்கப்படும் இந்நிதியை 240 நாட்களுக்குள் முழுமையாக மீளச் செலுத்த வேண்டும் என்பதுடன், தவறும்பட்சத்தில் எஞ்சிய தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், முந்தைய அரசாங்கம் கடன்களை மீளச் செலுத்தாத ஆலை உரிமையாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து, தகுதியான பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களும் உடனடியாக மாவட்ட செயலகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச் செயற்திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening