நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதானம்
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு பரவல் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டெங்கு ஒழிப்புச் சிரமதானம்
இதன்போது பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழல்கள், நுளம்புகள் பெருக்கமடையாத வகையில் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டு துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசேட சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. பரமேஸ்வரனின் நேரடி வழிகாட்டலில், பாடசாலை அதிபர் ரி.கே.எம். சிராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன் போது வீரமுனை இராணுவ முகாம் வீரர்களின் ஒத்துழைப்புடன், பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக இன்றும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி
இதன் தொடர்சியாக இன்று காலை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவத்தினர், இலங்கை பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து வைத்தியசாலை வளாகத்திலுள்ள டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை சுத்தப்படுத்தி, நீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறச் சூழலை சுகாதாரமானதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளவில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த விசேட வேலைத்திட்டத்தின் மூலம், பொதுமக்களும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கி டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - சுடரோன்


