இலங்கைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கடன் வழங்குநர்களின் நிலைப்பாடு! மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு
கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது எவ்வளவு விரைவாகப் பொருளாதாரத்தைத் திரும்பப் பெறுவது மற்றும் இழந்த உற்பத்தித்திறனைக் கட்டியெழுப்புவது என்பது தான் கேள்வி.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடு
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் இருந்து சில நிதிகளைப் பெற முடியும் என்றாலும் அது தற்காலிக நிவாரணம் மட்டுமே. இன்னும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படாவிட்டால், மீண்டும் அதே சுழற்சியில் நுழைவதைத் தவிர்க்க முடியாது.
இந்த விடயத்தில் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்ப்பை நாம் புரிந்து கொள்ள முடியும்.இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஸ்திரப்படுத்தவும் மாற்று வேலைத்திட்டத்தை முன்வைப்பது எங்களுக்கு எளிதான விஷயமல்ல.
கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் நடத்திய கலந்துரையாடல்களில், எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வங்கி அமைப்பில் நெருக்கடியை எதிர்பார்க்கவில்லை என்பதை ஒவ்வொரு கடன் வழங்குநர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த நாட்டில் ஒரு வலுவான வங்கி அமைப்பு இருக்க வேண்டும், இதன் மூலம் கடன் வழங்குநர்கள் எதிர்காலத்தில் தங்கள் கடன்களை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.