முன்னைய சபாநாயகருடன் ஒப்பிடுகையில் தற்போதைய சபாநாயகர் செலவழிப்பதில் சிக்கனம்
முன்னைய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவுடன் ஒப்பிடுகையில் தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, மிகவும் சிக்கனமாகவே தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது தெரிய வந்துள்ளது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் தணிக்கை அறிக்கையின்படி, முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தற்போதைய சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் பதவிக் காலங்களில் பொதுச் செலவினங்கள் மற்றும் சிறப்புரிமைகளின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
செலவிடப்பட்ட தொகைகள்
அதன் பிரகாரம், முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தனது ஏறக்குறைய நான்கு ஆண்டு பதவிக் காலத்தில் 20 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதற்காகச் செலவிடப்பட்ட தொகை 24,225,809.68 ரூபாவாகும்.
இருப்பினும், தற்போதைய சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன இதுவரை ஏழு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதற்காகச் செலவிடப்பட்ட தொகை 1,914,071.90 ரூபாவாகும்.

அதன்படி, முன்னாள் சபாநாயகரின் பதவிக் காலத்தில் ஒரு வெளிநாட்டுப் பயணத்தின் சராசரி செலவு சுமார் 1.21 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், தற்போதைய சபாநாயகரின் பதவிக் காலத்தில் அது சுமார் 273,439 ரூபாவாக உள்ளது. ஒரு பயணத்தின் சராசரி செலவுடன் ஒப்பிடும்போது இது சுமார் 77.4 சதவிகிதம் குறைவு ஆகும்.
இதற்கிடையில், முன்னாள் சபாநாயகர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக மூன்று வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், தற்போதைய சபாநாயகர் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் வசதிகள் தொடர்பாகவும் ஒரு மாற்றம் வெளிப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முன்னாள் சபாநாயகரின் எரிபொருள் படியாக 6.04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய சபாநாயகர், பொலன்னறுவை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு உரிமையான எரிபொருள் ஒதுக்கீட்டைத் துறந்துள்ளதாகவும், சபாநாயகர் பதவி தொடர்பான எரிபொருள் வசதி 900 லிட்டராகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய தரவுகள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர் அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அந்த தரவுகள் கூறுகின்றன. முந்தைய சபாநாயகரின் பணியாளர் குழுவில் 45 பேர் இருந்த நிலையில், தற்போதைய சபாநாயகரின் பணியாளர் குழு 20 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 55.6 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லம் தொடர்பாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய சபாநாயகர் அங்கு வசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் தரம் வாய்ந்த அரசு அதிகாரிகளுக்காக வழங்கப்படும் ஒரு அரசாங்க அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் தற்போது பயன்படுத்தி வருவதாகவும், அதன் மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் மற்றும் வீட்டு வாடகையைத் தனது சம்பளத்திலிருந்து செலுத்தி வருவதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், சபாநாயகர் இல்லத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ கூட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு நாடாளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அலுவலகம் கூறுகிறது.