யார் இந்த மகிந்த யாப்பா அபேவர்தன
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ள நிலையில், நாட்டின் தற்காலிக பதில் ஜனாதிபதியாக, நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்க உள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியில் ஆரம்பித்த அரசியல் பயணம் - மாகாண சபைகளுக்கு கடும் எதிர்ப்பு
மகிந்த யாப்பா அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகித்து வந்தவர். இலங்கை- இந்திய உடன்படிக்கைக்கு அமைய கொண்டு வரப்பட்ட 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து அவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகினார்.
எனினும் அதே திருத்தச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தென் மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
1983 ஆம் ஆண்டு மாத்தறை ஹக்மன தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவானார்.
1987 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்தின் கீழ் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் முறைமைய ஏற்படுத்தும் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.
நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தார். இதன் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அவருக்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டது.
லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்கவுடன் இணைவு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கும் அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருந்த லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்க உள்ளிட்டோருக்கும் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறினர்.
கட்சியில் இருந்து வெளியேறிய அவர்கள் ஜனநாயக ஐக்கிய தேசியக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தனர். அந்த கட்சியில் மகிந்த யாப்பா அபேவர்தன இணைந்துக்கொண்டார்.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் தென் மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.
இதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு தென் மாகாண முதலமைச்சராக பதவிக்கு வந்தார். இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட அவர், 1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இரு முறை முதலமைச்சராக பதவி வகித்தார்.
2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், எதிர்க்கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.
பிரதியமைச்சர் பதவியில் இருந்து சபாநாயகர் வரை
இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் பிரதி சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக பதவி வகித்தார். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் கமத்தொழில் அமைச்சராக பதவியேற்றார்.
சில வருடங்கள் கமத்தொழில் அமைச்சராக பதவியில் நீடித்தார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது மகிந்த தலைமையிலான எதிரணியில் செயற்பட்டார்.
இதன் பின்னர் மகிந்த உள்ளிட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஆரம்பித்த போது மகிந்த யாப்பாவும் அந்த கட்சியில் இணைந்துக்கொண்டார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டு தற்போது வரை அந்த பதவியை வகித்து வருகிறார்.
பதில் ஜனாதிபதி
இந்த நிலையில், இலங்கையின் 8 வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலக உள்ளனர்.
இதன் பின்னர் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் ஆகியோர் தெரிவு செய்யப்படும் வரை மகிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றுள்ள மகிந்த யாப்பா அபேவர்தன, இந்தியாவில் முகாமைத்துவம் தொடர்பான கல்வியை கற்றுள்ளார்.
இதனை தவிர ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் பிரதித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.