திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் மேலதிக நோயாளிகளை அனுமதிக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் பல மணி நேரம் ஓ.பி.டி கதிரையில் அமர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பரிதாப சம்பவத்தை இன்று (14) பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணொருவர் எமது ஊடக நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
மாவட்டத்தில் தற்போது நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவதனால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் செல்பவர்கள் நோயாளர்கள் அனுமதிக்கும் இடத்தில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டால் (ARU UNIT) கோவிட் நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 09ம் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி நிரம்பியுள்ளதால் நோயாளர்கள் அனுமதிக்கும் இடத்தில் தாமதம் ஏற்படுவதாகவும்,இதனால் வேறு சிகிச்சைகளுக்காக வரும் நோயாளர்களுக்குக் கோவிட் - 19 தொற்று ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்தினர் தொற்றாளர்களின் வீதம் அதிகரிக்கும் பட்சத்தில் இடப் பற்றாக்குறையைத் தீர்க்கும் விதத்தில் புதிய விடுதி மற்றும் கட்டில்களை அதிகரிக்க வேண்டும் எனவும் நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இருந்தபோதிலும் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் மிக விரைவாகச் செயற்பட்டு நோயாளர்களின் நலன் கருதி கோவிட் விடுதியின் கட்டில்களை அதிகரிப்பதுடன் குடிப்பதற்குச் சுத்தமான நீரையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலையில் நம்பி வரும் நோயாளர்களை மனக்கசப்பின்றி அரவணைத்துத் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களை உடனடியாக ஓ.பி.டி பிரிவிலிருந்து கோவிட் பிரிவிற்குத் தாமதமின்றி அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




