ஸ்பா நிலைய உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
தங்கள் வணிகத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு உடற்பிடிப்பு நிலையங்கள் (ஸ்பா) உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் இந்த தொழில் இலங்கையில் அதிகாரப்பூர்வ தொழிலாக மாறும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாட்டில் உடற் பிடிப்பு நிலையங்களை சட்டப்பூர்வமாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளதாகவும், ஆனால் சட்டப்பூர்வமாக்கும் செயல்முறை தாமதமாகி வருவதாகவும் இலங்கை உடற் பிடிப்பு நிலைய (ஸ்பா) உரிமையாளர்கள் சங்கத்தின் பிரசன்ன முனசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பில்லை..
“நாங்கள் உரிமம் பெற்ற பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களை மட்டுமே பணியமர்த்துகிறோம். நாங்கள் பொதுவாக பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பணியமர்த்துவதில்லை.
கொழும்புக்கு வெளியேயும் பயிற்சிகள் நடத்தப்படும் அதே வேளையில், இலங்கை மன்றக் கல்லூரியுடன் இணைந்து உடற் பிடிப்பு சிகிச்சையாளர்களுக்கான பயிற்சி பாடநெறி நடத்தப்படுகிறது என்பதையும் நாங்கள் கூற விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
அத்துடன் உடற்பிடிப்பு தொழில் நேரடியாக மூலம் 300,000 வேலைவாய்ப்புகளையும் மறைமுகமாக 600,000 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என்றார்.
“எங்கள் நிறுவனங்களை பொலிஸார் சோதனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் பாலியல் தொழில் நடத்தப்படும் விடுதிகளை சோதனை செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.



