கூட்டமைப்பின் சிலர் ரணிலுக்கு ஆதரவு - அமைச்சர் ஹரின் தகவல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பார்கள்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் சர்வகட்சி ஆட்சியை அமைப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு டளஸூக்கு ஆதரவு
இதேவேளை, நாளை (20) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்களிப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
மேலும்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அனுர பிரியதர்சன யாப்பா உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.