தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வு: செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள கருத்து(Video)
சம்பள பிரச்சினை தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனத்தினரிடமிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று (22.11.2023) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு, இன்று சௌமியபவனில் சம்பள பிரச்சினை சம்பந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னின்று செயற்படும் கட்சி
அந்த கலந்துரையாடலில் பல்வேறு மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த முறை சம்பள பிரச்சினைக்கான தீர்வு, தேயிலை உற்பத்தி செலவு மற்றும் வாழ்வாதார செலவு ஆகியவற்றை ஒப்பிட்டு தீர்மானிக்கப்படும்.
தொடர்ந்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் முன்னின்று செயற்படுகிறது.
வரும் வாரத்தில் தொழிலாளர் திணைக்களத்தின் முன்னிலையில், எமது கட்சியும் பெருந்தோட்ட நிறுவனத்தினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் பெருந்தோட்ட நிறுவனத்தினரின் மீது எமது கட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.




