ஆறு மாதங்களில் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு - தாயிடம் சபதம் செய்துள்ள தம்மிக்க
எதிர்வரும் 6 மாதங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால், அதிகாரத்தில் இருப்பது அர்த்தமில்லை என தனது தாய் தெரிவித்ததாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார். வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் என்னிடமுள்ளது.
தம்மிக்கவின் எதிர்பார்ப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டு மக்கள் பசியில் இருக்கும் போது நான் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே - அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.
அதனை 6 மாதங்களுக்குள் செய்ய முடியாவிட்டால் அமைச்சு பதவியை துறக்குமாறு மனைவி அறிவுரை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவியில் இருந்து நாட்டில் மாற்றத்தை செய்யத் தவறினால் 'தாத்தா கம் ஹோம்' என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் எச்சரித்துள்ளனர்.
குடும்பம் வழங்கிய ஆலோசனை
அந்தவகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம். அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால் பதவி விலகத் தயார் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிலையில், அவருக்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மகிந்த அரசாங்கத்துடன் நெருங்கிய நபரான தம்மிக்க நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தப் போவதாக தெரிவித்து அமைச்சு பதவியினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.