வடக்கு கிழக்கில் உரிமைகளை பெற தொடரும் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்குமா!
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் ஈழ மக்களின் உரிமைகளை பெற பல போராட்டங்கள் தற்போதைய அநுர அரசாங்கத்திலும் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக வடகிழக்கில் பல உரிமைகளுக்கான போராட்டங்களை தமிழ் பேசும் மக்கள் நடாத்தி வருகின்ற நிலையில் எடுத்துக் காட்ட கூடிய விடயங்களாக காணாமல் போன உறவுகளுக்கான தீர்வு, நில அபகரிப்புக்கான போராட்டம், பயங்கரவித தடை சட்டம் நீக்க வேண்டும் என பல வகையான உரிமை போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
"இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம்" என்ற தொனிப் பொருளிலான 100 நாள் செயல் முனைவொன்றை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மூன்றாவது வருடங்களாக இவ் வருடமும் ஆரம்பித்துள்ளனர்.
இதனடிப்படையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற பெரும்பான்மை அரசாங்கம் அரசியல் தீர்வு பற்றி பல உறுதி மொழிகளை தமிழர்களுக்கு வழங்கினாலும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினாலும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அவ்வப்போது ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் காலங்களிலும் சிறுபான்மை கட்சி தலைவர்களை அழைத்து பெரும்பான்மை கட்சி தலைவர்கள் அரசியல் தீர்வு பற்றி பேச்சுவார்த்தைகளை நடாத்தினாலும் தீர்வின்றியே காணப்படுகிறது.
போராட்டங்கள்
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் குறித்து வடகிழக்கு மக்கள் அதிருப்தி வெளியிட்ட நிலையில் போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றனர். ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி பேசப்பட்ட போதிலும் நிலையான தீர்வு கிடைக்கவில்லை. ஆனாலும் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகள் சர்வதேச நீதி பொறி முறையை வலியுறுத்தி போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
செம்மணி மனித புதை குழி விவகாரம் தொடக்கம் மனித உரிமைகள் விடயத்தில் அரச தரப்பு கரிசனையின்றி செயற்படுவதாக காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வடகிழக்கு விஜயத்தின் பின் வடகிழக்கு சிவில் சமூகங்களுக்கான கடிதங்களுக்கான பதில்களை அளித்துள்ளார். " பொறுப்புக்கூறலில் அரசாங்கம் தவறிவிட்டது எனவும் , மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் அவர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பாக, ஜூலை 14 மற்றும் ஆகஸ்ட் 4, ஆகிய திகதிகளில் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு இந்த பதில் கிடைத்துள்ளது.
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கவும், புதிய நில அபகரிப்புகளை நிறுத்தவும், நீண்ட காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரவும் உடனடித் தேவை உள்ளது என டர்க் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களுடனான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான நினைவுகூரல் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். சமீபத்தில் செம்மணி புதைகுழிக்கு விஜயம் செய்ததை சுட்டிக்காட்டிய டர்க், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணக்கமான நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதில் தொடர்ச்சியான அரசாங்கங்கள் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கவலைகள் தனது வரவிருக்கும் அறிக்கையில் பிரதிபலிக்கும் என்று ஆணையர் உறுதியளித்தார். அத்துடன், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு ஐ.நா. தொடர்ந்து ஒத்துழைக்கும் எனவும் உறுதிப்படுத்தினார் (மூலம் _ஆணையாளரின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளம்) இப்படியான தருணத்தில் காணாமல் போன சமூகத்தினர் தொடரான கண்ணீர் சிந்திய நிவையில் உறவுகளை தேடிய வீதி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
இதன் மூலம் பல தாய்மார்கள் தேடி தேடி அலைந்து உறவுகளுக்காக உயிரை மாய்த்துள்ளனர். யுத்த காலத்துக்கு பின்னர் அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து அக்கறை காட்டவில்லை என்பதும் இதன் மூலமாக புலனாகின்றது. தற்போதைய அரசாங்கம் புதிய தலைமைத்துவ பொறுப்புடன் ஆட்சி பீடமேறியுள்ளதுடன் இனமத பேதமற்ற அரசியல் முறை என கூறி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் தீர்வு விடயத்தில் மௌனித்தே இருக்கின்றனர்.
தமிழர் தாயகங்களில் நில ஆக்கிரமிப்பு, தொல் பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கம் ,இனவாத அரசியல் சிந்தனை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இது குறித்து திருகோணமலையை சேர்ந்த மனித உரிமை சிவில் செயற்பாட்டாளர் அமுதன் தெரிவிக்கையில் " தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு தான் தேவை போராடினாலும் எங்கள் உரிமைகளை மீளப் பெற முடியாத காணி அபகரிப்பு பௌத்த மயமாக்கம் தொடர்ந்தே வருகிறது. இங்கு சம்பூரில் மனித புதை குழி மூலமாக மனித எச்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது .இதனை வைத்து பார்த்தால் இது கூட எங்கள் உறவுகளாக இருக்க நேரிடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எனவும் எங்களுக்கு நிலையான தீர்வை ஆளும் அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் பல மனித கூட்டு படுகொலைகள் இடம் பெற்றுள்ளன. இதனை நினைவு கூறுவது மட்டும் தான் காணப்படுகிறது. இதற்கான நீதியை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தமிழர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. மூதூர் குமார புரத்தில் மனித படுகொலையில் 24 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இது போன்று யுத்த சூழ் நிலையின் போது தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய 17 தமிழ் பேசும் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதாக உறவுகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற முன் பல வாக்குறுதிகளை வடகிழக்கு தமிழ் மக்களுக்கு அளித்த போதிலும் அதனை நிறைவேற்றாது அதற்கு எதிராக செயற்பட்டனர். இந்த நிலையில் மக்களின் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது, .திருகோணமலையில் புல்மோட்டை ஆத்திக்காடு வயல் நிலம் அரிசி மலை பௌத்த பிக்குவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அது போன்று முத்து நகர் விவசாய காணி தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின் சக்திக்காக தாரை வார்க்கப்பட்டுள்ளது இது போன்று பல எதிரான திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அப்பாவி மக்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனை விடயங்களையும் வெற்றி கொள்ள மக்கள் பல சாலை மறியல் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் மற்றும் முன்னெடுத்து வருகின்றனர். எனவே தான் தற்போதை ஆட்சியில் உள்ள அநுர அரசாங்கம் தான் தீர்வுகளை தர வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பெரும் உரிமைகளை பெறுவதற்கான முயற்சியாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



