விவசாயம் செய்வதற்கு மண் இல்லை : சர்வதேசம் வரை செல்வோம் - சுந்தரேசன்
மட்டக்களப்பில் பாரிய பிரச்சினை, மண் பிரச்சினை இந்த மண் போனால் விவசாயம் செய்வது எதில்? என தேசிய மக்கள் சக்தி மட்டு மாவட்ட அமைப்பாளரும் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவருமான ந.சுந்தரேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு தாமரைக்கேணி வீதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் இன்று (13) இடம்பெற்று ஊடக மாநாட்டிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
மட்டக்களப்பில் பாரிய பிரச்சினை, மண் பிரச்சினை இந்த மண் போனால் விவசாயம் செய்வது எதில்? மண் லொறியில் போனது போதாது என இப்போது புகையிரதத்திலும் ஏற்றப்பட்டு போகின்றது. இதற்கு அரசாங்கமும், அரச ஊழியர்களும் உடந்தை எனவே இந்த பிரச்சினை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படும்.
அரசாங்கம் சொன்னது போல இந்த பசளைகளான உரங்களை வழங்கி இருக்க வேண்டும். இலவசமாக வழங்குவதாக சொன்னார்கள் அதுவும் இல்லை பணத்துக்கு வழங்குவதாக சொன்னார்கள் அதுவும் இல்லை இந்த உரத்தை தனியார் இறக்குமதி செய்ய கேட்டது அதற்கும் இனங்கவில்லை.
பின்னர் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று உலகத்திலே இல்லாத ஒரு முறைமையை கொண்டு வர முயற்சித்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்து பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இந்த நாட்டின் டொலர்களை அழியச் செய்தது இந்த அரசாங்கம்.
இந்த அரசாங்கத்தை பற்றி குறை கூறுவதாக இருந்தால் அந்த குறைகள் நீண்டு கொண்டே போகும் ஆனால் இன்று விவசாயிகளின் மத்தியில் இருக்கின்ற பிரச்சினை, இந்த இயற்கை விவசாய உரத்தை அறிமுகப்படுத்தியதால் தான் என்ற ஒரு பெரிய உண்மையைக் கண்டிருக்கின்றோம்.
இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நாங்கள் முழுமையாக ஆதரிக்கின்றோம். ஆனால் அது சிறிய சிறிய முறையாக திட்டமிட்டு நடைபெற்றிருக்க வேண்டும். இந்த இயற்கை விவசாய முறையால் நாம் விவசாயத்தில் பாரிய இழப்பீடுகளை சந்தித்திருக்கின்றோம்.
இதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு பாரியளவு டொலர் போயுள்ளது. இதனால் நாங்களும் பல டொலர்களை இழந்து இன்று அத்தியவசிய பொருட்களை கூட வாங்க டொலர் இல்லாமல் இருக்கின்றது.
ஆகவே இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அகில இலங்கை விவசாய சம்மேளனத்துடன் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சங்கமும் இணைந்து 29 ம் திகதி பொலன்னறுவையில் பாரிய மாநாடு ஒன்றை நடாத்தவுள்ளோம், அதில் நாட்டில் இருந்து அனைத்து பிரதேசங்களில் இருந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து அதனை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படும்.
மட்டக்களப்பில் இருக்கின்ற பிரச்சினை மண் பிரச்சினை இது தொடர்பாக பல இடங்களுக்கு சென்று நான் கதைத்துள்ளேன். ஆனால் இதற்கு அரசாங்கமும், அரச ஊழியர்களும் உடந்தை என்பதை தெட்டதெளிவாக தெரிகின்றது. இதனை நாடாளுமன்றத்தில் கதைப்பதற்கு எமது உறுப்பினரை ஒழுங்கு செய்திருக்கின்றோம்.
நாடாளுமன்றதில் கதைக்கப்படுவது
ஹன்சாட்டில் வரும் அதனை கொண்டு எமக்கு உதவிவரும் நாடுகளுக்கு கொண்டு செல்ல
இருக்கின்றோம்.
இந்த பிழைகளை சுட்டிக்காட்டி இலங்கையில் உள்ள மந்திரி சபையிலேயே, அரச
திணைக்களங்களுக்கோ கொண்டு செல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை எனவே இந்த
பிரச்சினையை சர்வதேச நாடுகளுக்கு கொண்டு சென்றால் தான் இதற்கு தீர்வு
காணமுடியும் என்றார்.



