பாலங்களை பாதுகாப்பதில் அக்கறையற்று செயற்படும் சமூகம் தொடர்பில் விசனம்
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் பாலங்களை பாதுகாப்பதில் அவர்களுக்குள்ள பொறுப்புணர்ச்சி அற்ற தன்மை தொடர்பில் விசனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகவியல் கற்றலாளர்களின் அவதானத்திற்குட்பட்ட பாலமொன்றின் நிலை தொடர்பில் கருத்திடும் போதே அவர்கள் தங்கள் விசனத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
விவசாய நிலத்திற்கு செல்லும் பிரதான பாதையொன்றின் சிற்றாறுக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பாலம் ஒன்றின் எஃகு சட்டங்கள் திருடப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிய போதும் அது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்காதது கவலையளிப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
எஃகு சட்டங்கள்
சீமெந்தினால் கட்டமைக்கப்பட்ட அந்த பாலத்தின் வீதிக்கு மேலாக உள்ள இரு பக்கங்களிலும் ஏற்படுத்த வேண்டிய உயரத்தடைகளை எஃகு சட்டங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
வழமையான நியமங்களுக்குள்ள நீளத்தில் மூன்று எஃகு சட்டங்கள் நீளத்தைக் கொண்ட பாலமாக அது இருக்கின்றது.
ஒவ்வொரு பக்கமும் மூன்று நிரைகளில் (வரிகளில்) எஃகு சட்டங்களை நிலைக்குத்து எஃகு தூண்களில் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
இந்த நிலையில் ஒரு பக்கத்தில் இருந்த இரு எஃகு சட்டங்களையும் மற்றைய பக்கதில் இருந்த ஒரு எஃகு சட்டத்தையும் அந்த கட்டமைப்பில் இருந்து கழற்றி அகற்றியுள்ளார்கள்.
எனினும் அது தொடர்பில் அவற்றை மீட்டெடுத்து மீளவும் பாலத்தின் நிலைக்குத்து தூண்களில் பொருத்திக் கொள்ள முயற்சிக்கப்படவில்லை.
அவ்வாறு மீளவும் பொருத்தப்பட்டு பாலத்தின் முழுமையை தொடர்ந்தும் பேண முயற்சிக்கும் போது தான் அதன் பராமரிப்பு சீராக இருப்பதோடு கட்டமைப்பு நேர்த்தியினால் உருவாகும் காட்சித்தோற்ற அழகும் அப்பகுதிக்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை.
கழற்றி அகற்றப்பட்ட விதம் யாதாயினும் ஒரு முறையில் இருப்பினும் அவற்றை மீள எடுத்தல் அல்லது அவற்றுக்கு புதிய வேறு மூன்று சட்டங்களை கொண்டுவந்து பொருத்தி, அதன் கட்டமைப்பை மாறாமல் பேணிக்கொள்ளும் ஆர்வமும் பொறுப்புணர்ச்சியும் அப்பாதையை பயன்படுத்தி வரும் மக்களிடையே உருவாகாதிருப்பது அந்த சமூகத்தின் உட்கட்டுமானத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
மக்களிடையே விழிப்புணர்வு
கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள உட்கட்டுமானங்கள் தேவைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒரு சூழலின் இயற்கையையும் அதன் இயல்பையும் மனித வாழ்வியலுக்காக கட்டுப்படுத்திக் கொள்ளும் ஒரு உபாயமாகவே உட்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அத்தகைய உட்கட்டுமானங்களை உருவாக்குவதற்கு சில இடங்களில் தொடர்சியான போராட்டங்களை பொதுமக்கள் செய்து அதன் பின்னரே அவை அவ்வாறான இடங்களில் உருவாக்கி கொடுக்கப்படுவதையும் இங்கே நினைவுபடுத்தல் சாலச் சிறந்ததாகும்.
இவ்வாறான ஒரு சூழலில் மூன்று பிராதன வீதிகளான A34 மற்றும் B296 மற்றும் B334 வீதிகளை இணைப்பதோடு 30 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக்கொண்ட பாதையில் போக்குவரத்தை இலகுவாக்கும் நோக்கோடு இங்கு சுட்டிக்காட்டப்படும் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்ய முடிகின்றது.
இந்த அவதானிப்புக்கள் மூலமும் அப்பாதையினை பயன்படுத்தி வரும் மக்களிடையே மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலமும் மக்களிடையே உட்கட்டுமானங்களை பேணிப் பராமரிக்கும் பொறுப்புணர்ச்சி பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவற்றை பேணிப்பாதுகாப்பதற்காக எவ்வாறான அணுகல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் பற்றிய போதிய அறிவும் மிகக்குறைவாகவே இருக்கின்றதை அறிய முடிகின்றது.
இது தொடர்பில் சமூக அக்கறையுடைய சகல தரப்புக்களும் கூடிய கவனமெடுத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு உட்கட்டுமானங்களை பராமரிப்பதற்கான அணுகல்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் அவசியமாகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
