திருகோணமலையில் சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் 2024ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வானது வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட அடைவு மட்டத்தினை பெற்றுக் கொண்டமைக்காக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ந.இன்பராஜ் ஆகியோர் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கரைச்சி பிரதேச செயலகம் 2024ஆம் ஆண்டு தேசிய இலக்கினை அடைந்து தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமைக்கு கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் அவர்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் ந.கீதரோகினி, சமூக பாதுகாப்பு விடயப்பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஜசிந்தா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.நிரஞ்சலா ஆகியோரிற்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
விருதுகள்
மேலும், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக இணைப்பதிகாரி ட.கம்சனா மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ம.மகிபரன் ஆகியோரும் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தவிசாளர் டி.எம்.கே. திஸாநாயக்க, பிரதிப் பொது முகாமையாளர் கல்தாரி டி சில்வா, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் மோ.பிரகாஷ், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிரேஷ்ட இணைப்பதிகாரி பா.பிரதீபன், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் (சந்தைப்படுத்தல்) லக்மால், அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







