சுற்றுலா பயணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்!வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் கொள்ளையிடும் சம்பவங்கள்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
ஒரு தனிநபரினால் தமது சமூக வலைத்தளப்பகத்தில் பகிரப்படும் தகவல்களை பயன்படுத்தி,அவர்கள் இல்லாத நேரத்தில் வீடுகளில் கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனவே ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட பயணங்கள்,நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
