கிண்ணியா பிரதேச ஆசிரியர் இடமாற்றத்தில் சமூக நீதி பேணப்படவில்லை: ஆசிரியர்கள் புகார்
கடந்த காலங்களில் கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் சமூக நீதி பேணப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஒரே பாடசாலையில் எட்டு வருடங்கள் ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
விண்ணப்பப் படிவங்கள், வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே பாடசாலையில் எட்டு வருடங்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள், குறித்த பாடசாலை அதிபர் ஊடாக திகதிக்கு முன்னர் அவற்றைப் பூர்த்தி செய்து வலயக்கல்வி பணிமனைக்குச் சமர்ப்பிக்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் சமூக நீதி பேணப்படவில்லை எனவும், அரசியல், கட்சி, நட்பு, பதவி நிலை மற்றும் உறவுமுறை போன்ற விடயங்கள் ஆதிக்கம் செலுத்தியதாகவும் இதனால் ஆசிரியர் இடமாற்றத்தில் பாடசாலை தேவைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
தங்களது வீட்டுக்கருகில் நகர்ப்புறப் பாடசாலையில் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றிய ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது, இவர்கள் அரசியல்வாதிகளைக் கூஜா பிடித்து ஓரிரு தினங்களில் மீண்டும் அதே பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றமையை இவர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
அதேபோல் கடந்த காலங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர், தனது உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் இடமாற்றத்தைப் பாதுகாப்பதற்காகவும் , அவர்களை விரும்பிய பாடசாலைகளுக்குக் கொண்டு வருவதற்காகவும் ஒரே பாடசாலையில் எட்டு வருடங்கள் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் கூட அதி கஷ்டப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் பாடசாலைத் தேவையோ, மேலதிக ஆசிரியர்களைச் சமப்படுத்தும் கொள்கையோ கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த காலங்களில், ஆசிரியர் இடமாற்றத்தில் அநீதி இழைக்கப்பட்டோர் மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும், ஆசிரியர் இடமாற்ற சபையின் விதிமுறையை மீறி , அந்த மேன்முறையீட்டுச் சபையில் வலய கல்விப் பணிப்பாளர் பிரசன்னமாகி இருந்தமை இடமாற்ற சபையின் சுயாதீன செயற்பாடுகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், தேசிய ரீதியில் கிண்ணியாவின் கல்வி வளர்ச்சி தொடர்ந்து கடைசி நிலையில் இருப்பதற்குப் பாடசாலை தேவை கருதி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படாமையும் ஆசிரியர் வளங்கள் சமமாகப் பகிரப்படாமையும் ஒரு முக்கிய காரணம் என புத்திஜீவிகளும் சமூக அமைப்புக்களும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
எனவே, கோவிட் அனர்த்த சூழ்நிலை காரணமாகக் கடந்த இரண்டு வருடங்கள் கிண்ணியா கல்வி வலயத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வருடாந்த இடமாற்றத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில்,
மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்த இடமாற்றங்களில் சமூக நீதி பேணப்பட வேண்டும் என
ஆசிரியர்களும் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.



