சமூக நியாயத்தையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தலுக்கான செயல் திட்டம் ஆரம்பம்
மட்டக்களப்பில் (Batticaloa) சமூக நியாயத்தையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தலுக்கான 3 வருட செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தோனி தெரிவித்துள்ளார்.
சமூக சகவாழ்வை முன்னெடுக்கும் தேசிய சமாதானப் பேரவையின் செயல்திட்டங்களின் ஒரு அம்சமாக சமாதானத்தை நிலைநிறுத்தும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் பேரவையின் உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தைப் பற்றித் தெளிவூட்டும் அறிமுக நிகழ்வு இன்று (04.11.2024) தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
புதிய திட்டம்
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூகங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வை வலுப்படுத்தும் விதமாக தேசிய சமாதானப் பேரவையினால் சமாதானத்திற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியமும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்களின் மற்றொரு பரிமாணமாக இந்தப் புதிய திட்டம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா குறிப்பிட்டுள்ளார.
மேலும், பன்மைத்துவ உள்வாங்கல் மூலம் சமூக நியாயத்தையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தல் எனும் இந்தத் திட்டத்தின் கீழ், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள், பெண் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், பெண் சமூகத் தலைவிகள், இளைஞர்கள் ஆகியோர் உள்வாங்கப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார பிரச்சினை
அத்துடன், வலையமைக்கப்பட்டு ஏற்படுத்தப்படும் மோதல்களைக் குறைத்தல், மற்றும் ஆற்றுப்படுத்தலுக்குத் தூண்டுதல், பிரதேச மட்டத்தில் இனங்களுக்கிடையில், மத ரீதியான அழுத்தங்கள், மோதல்களைத் தீர்ப்பதற்கும், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் இந்தத் திட்டம் பாரிய பங்களிப்பைச் செய்யும் என்றும் நிரோஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படும் செயற்பாட்டாளர்களுக்கு பல்வேறு மட்டங்களில் பல பயிற்சி நெறிகளும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் முனிப் ரஹ்மான், மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தரும் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான கே. சங்கீதா, உட்பட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மற்றும் கத்தோலிக்கர் அல்லாத சமயங்களைச் சேர்ந்த சர்வமத செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.