அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் வீழ்ச்சியால் காத்திருக்கும் நெருக்கடி
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து சென்றால், எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலைகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள், அத்துடன் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நிதி அமைப்பில் காணப்படும் அதிகப்படியான ரூபாய் புழக்கம் மற்றும் மத்திய வங்கி சந்தையிலிருந்து டொலர்களை கொள்வனவு செய்வதால் அமெரிக்க டொலருக்கான தேவை அதிகரித்துள்ளது.
இது இலங்கை ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அரசியல் பதற்றங்கள்
“மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய அரசியல் பதற்றங்கள் சுற்றுலாத் துறையிலிருந்து வரும் அந்நிய செலாவணி வரவைக் குறைத்துள்ளது.

அதே நேரத்தில் ஏற்றுமதித் துறை எதிர்கொள்ளும் சவால்களும் நாட்டிற்குள் டொலர் வரவில் சரிவுக்கு வழிவகுத்துள்ளது. அத்துடன் ஏற்றுமதித் துறை எதிர்கொண்டுள்ள சவால்களும் நாட்டுக்குள் டொலர் உள்வருவதை வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
இலங்கை எரிபொருளை அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தியே இறக்குமதி செய்யப்படுகின்றது.
எரிபொருள் இறக்குமதி
இதனால் ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எரிபொருள் டொலரில் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் ரூபாயாக மாற்றப்பட்டு அதன் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, ரூபாய் வீழ்ச்சியடையும் போது எரிபொருள் விலைகள் அதற்கேற்ப உயரும்.

இந்த எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்திற்கு வழிவகுத்து, இறுதியில் மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் மற்றும் அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்தும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னர் அமெரிக்க டொலரின் அதிகூடிய விற்பனை விலை நேற்று பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 331.15 ரூபாயாக பதிவாகியிருந்ததுடன், அதற்கு முந்தைய நாள் அதன் விற்பனை விலை 329.92 ரூபாயாக பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.