கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 452 தொற்றாளர்கள் அடையாளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 452 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் அதிகம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். இது காலத்தின் கட்டாயம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 452 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 400 பேர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 52 பேர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் ( சனிக் கிழமை) 36 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கரைச்சி மருத்துவ அதிகாரி பிரிவில் 24 பேரும், பளையில் ஒருவர் பூநகரியில் மூவர், கண்டாவளையில் எட்டு பேர் காணப்படுகின்றனர். அத்தோடு 1160 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இரண்டு மரணங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே மக்கள் அதிகம் விழிப்புணர்வுடன் ,அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியும் செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சுகாதார திணைக்களத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குப் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது. தற்போது இதனடிப்படையில் 1372 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.