கொழும்பு துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் பொருட்களை கடத்திய மோசடி அம்பலம்
கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பொருட்களைக் கடத்தி வந்த சட்டவிரோத குழுவை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்ககம் கண்டுபிடித்து முறியடித்துள்ளது.
இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சுமார் 73 லட்சம் கிலோகிராம் (7300 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான) பாகிஸ்தான் பாறை உப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 3.15 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய்களாகும்.
பாகிஸ்தான் பொருட்களுக்கான இறக்குமதித் தடை
மோசடியின்படி, பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகம் வழியாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்கள் மூலமாகவும் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அத்துடன், குஜராத்தின் முன்ட்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்கள் மூலம் 295 கொள்கலன்கள் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பொருட்களுக்கான இறக்குமதித் தடையைத் தவிர்க்க, ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் மூலம் போலி வர்த்தக ஆவணங்கள் மற்றும் போலி உற்பத்தி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறப்புச் சோதனை
இருப்பினும், இலங்கையில் தாக்கல் செய்யப்பட்ட சுங்க ஆவணங்களில், பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவை என்றும், அதன் இறுதி இலக்கு இந்தியா என்றும் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
2026, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11 வரை இந்திய அதிகாரிகளால் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில் இந்தச் சதி அம்பலமானது பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசக் குழு இதில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடை 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.