சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வரவிருந்த 620 கிலோ கிராம் முந்திரி பருப்பு மீட்பு: ஒருவர் கைது!
ராமநாதபுரம்- மரைக்காயர்பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றிக் கொண்டிருந்த உயர் ரக முந்திரி பருப்பு மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(26.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஒருவர் கைது
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர் பட்டினம், குந்துகால், களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் கஞ்சா, பீடி இலை பண்டல்கள், முந்திரி பருப்பு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பைபர் படகில், இது போன்ற பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவ மணிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், பொலிஸார் அதிகாலையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக வாகனங்களில் கொண்டு வரப்பட்ட உயர் ரக முந்திரி பருப்புகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் இருவர் கடலில் குதித்து தப்பிய நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
620 கிலோ கிராம் முந்திரி மீட்பு
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 620 கிலோ எடை கொண்ட உயர் ரக முந்திரி பருப்பு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முந்திரி பருப்பு அடங்கிய சாக்கு மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனம், இரண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் படகு உள்ளிட்டவற்றை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் தப்பியோடிய சந்தேக நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

