தமிழரசுக் கட்சி வழக்கு தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட வேண்டும்: கே.வி.தவராசா
தமிழரசுக் கட்சி (Ilankai Tamil Arasu Kachchi) தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (19.05.2024) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சுமூகமாக முடிவு
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், திருகோணமலை நீதிமன்றில் உள்ள வழக்கை முதல் திகதியிலேயே முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயற்ப்பட்டோம்.
இது ஒரு பொதுநல வழக்கு. தற்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இறுதியாக நாம் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம். வழக்காளியின் சட்டத்தரணிகளுடனும், வழக்காளியுடனும் பேசி இந்த விடயத்தினை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வந்து வழக்கை முடிவுறுத்துவதற்கான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் பொதுக்குழுவினை கூடி சுமூகமாக முடிவு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது செயற்பாடுகள் அமைந்தன என்று தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனும்இ கே.தவராசாவும் மத்தியகுழுவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |