கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூடப்படும் கேட்டுகளால் நெருக்கடியில் பயணிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் வசதிக்காக வருகை முனையத்தில் புதிதாக நிறுவப்பட்ட 4 ஸ்மார்ட் கேட்கள் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சட்ட சிக்கல் காரணமாக அவை மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட் கேட் அமைப்பு, பயணிகள் தங்கள் கடவுச்சீட்டுகளை இந்த வாயில்களில் ஸ்கேன் செய்து, அங்குள்ள கமராவில் தங்கள் முகங்களைக் காட்டி, குடிவரவு அதிகாரியின் தலையீடு இல்லாமல் கணினி அமைப்பு மூலம் சரிபார்ப்பதன் மூலம் நாட்டிற்குள் விரைவாக நுழையும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு
எனினும் இலங்கையில் தற்போதைய சட்டம், 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் எண் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டமாகும்.

அதில் நாட்டிற்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே நாட்டிற்குள் நுழைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இல்லாத இந்த ஸ்மார்ட் கேட் அமைப்பை, உரிய சட்டத்தின் தொடர்புடைய பிரிவில் இன்னும் சில வார்த்தைகளை இணைத்து சட்டம் திருத்தப்படும் வரை பயன்படுத்த முடியாது என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.