நாமல் ராஜபக்ச உட்பட சிலருக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோரும் மொட்டுக்கட்சி
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ச, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன உட்பட முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை அனுப்பிய மொட்டுக்கட்சி
சர்வக்கட்சி ஆட்சியின் புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ளது. அந்த அமைச்சரவையில் நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர் பட்டியல் ஒன்றை பொதுஜன பெரமுன ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு மேலதிகமாக பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.பி.திஸாநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு விருப்பத்தை வெளியிடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கினால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்
இதனிடையே சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட சிலர் எந்த வகையிலும் இந்த யோசனைக்கு இணங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல்,, மகிந்தானந்த, ரோஹித்த ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டால், மீண்டும் போராட்டம் ஆரம்பிக்க அது வழிவகுக்கும் என அவர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இவர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்கினால், சர்வக்கட்சி ஆட்சியில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள இணங்கியுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளை ஏற்க முற்றாக மறுத்து விடக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமான சிறப்பு பேச்சுவார்த்தை ஒன்று நாளை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.