ஐ.தே.கட்சியில் இணைய தயாராகும் மொட்டுக்கட்சியினர்
அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அண்மைய காலத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் சிலரும் இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர்களில் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலரும் அடங்குகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எழுச்சி, ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள கருத்து முரண்பாடுகள் ஆகியன காரணமாக இவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், அடுத்து நடைபெறும் தேர்தலில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவார்கள் என தெரியவருகிறது.