உக்ரைனுக்கு மின்சாரத்தை நிறுத்தப்போவதாக ஸ்லோவாக்கியா எச்சரிக்கை
உக்ரைன் வழியாக ஸ்லோவாக்கியாவிற்கு வரும் ரஷ்யாவின் மசகு எண்ணெய் விநியோகம் உடனடியாகத் தொடங்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் அவசர கால மின்சார விநியோகத்தை நிறுத்தப் போவதாக ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 27ஆம் திகதி முதல், உக்ரைன் எல்லையில் உள்ள சோவியத் காலத்து 'த்ருஷ்பா' (Druzhba) குழாய் வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால்தான் இந்தக் குழாய் சேதமடைந்ததாக உக்ரைன் கூறினாலும், இரண்டு நாட்களுக்குள் எண்ணெய் விநியோகத்தை மீண்டும் சீர் செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபிகோ தனது எக்ஸ் தளத்தில் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல்
ரஷ்யாவின் தாக்குதல்களால் தனது மின்சாரக் கட்டமைப்பை இழந்து தவிக்கும் உக்ரைனுக்கு, ஸ்லோவாக்கியா ஒரு மிக முக்கியமான மின்சார ஆதாரமாக உள்ளது.
கடந்த மாதம் உக்ரைன் இறக்குமதி செய்த மொத்த மின்சாரத்தில் 18 சதவீதம் ஸ்லோவாக்கியாவிலிருந்தே வழங்கப்பட்டது.

தற்போது கடும் குளிர்காலம் நிலவும் சூழலில், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உக்ரைன் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே உக்ரைனுக்கு ஆதரவான ஒருமித்த கருத்து நிலவினாலும், ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் இன்னும் ரஷ்யாவின் எரிசக்தியையே நம்பியிருப்பதோடு, மாஸ்கோவுடன் நெருக்கமான உறவையும் பேணி வருகின்றன.
எரிசக்தி போர்
இந்தச் சிக்கலுக்குப் தீர்வாக, குழாய் வழித்தடத்தைப் பழுதுபார்க்கும் வரை கடலோரப் பாதைகள் அல்லது மாற்று வழித்தடங்கள் மூலம் எண்ணெயை அனுப்பத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைன் மண்ணைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்லும் ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதி இப்போது ஒரு பெரிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சுமூகமான முடிவு எட்டப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்திப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam