மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார்நாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான வகையில் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டார் என தெரிவித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான காலப்பகுதியில் பாரிய பின்னடைவை சந்தித்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பல்வேறு கட்சி பூசல்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சந்திரிகா தரப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தற்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் திரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சை கருத்து
கொழும்பு டார்லி வீதியில் இந்த தலைமையகம் அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தற்கொலை கொண்டு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சர்ச்சை கருத்தினை வெளியிட்டு இருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதனை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இந்த தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மைத்திரி, கட்சியின் தலைமை பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என சந்திரிக்கா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமை பதவியை தொடர்ச்சியாக வகித்து வருவது கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கட்சியின் தலைவராக பதவி வகித்த மைத்திரி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியின் போஷகராக பதவி வகிக்க வேண்டும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம்
எனினும் கட்சியாப்பின் விதிகளை மீறும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்தும் கட்சியின் தலைமை பதவியில் நீடித்து வருவதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்சியின் போஷகர் மற்றும் கட்சியின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் ஒரே நேரத்தில் வகிப்பது பொருத்தமற்றது என சந்திரிக்காவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதேவேளை, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரத்தி துஷ்மந்த மித்ரபால, கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் நிமால் சிரிபால டி சில்வா, துணைத்தலைவர் ஃபைசர் முஸ்தபா ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மற்றும் 52 நாள் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக பதவியில் அமர்த்தியமை போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்த விடயங்களை சட்டத்தரணிகள் நீதிமன்றில் இன்று சுட்டிக்காட்டி இருந்தனர்.
சந்திரிக்காவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சந்தக ஜயசூரிய, அமில திஸாநாயக்க, பூர்ணிமா ரட்நாயக்க மற்றும் எம்.எஸ்.ஆர். பெரேரா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான உத்தரவினை கொழும்பு மாவட்ட நீதவான் சந்துன் வித்தான பிறப்பித்திருந்தார். மைத்திரிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் தலைமையகத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது. மைத்திரியுடன் முரண்பட்டிருந்த சில கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18ஆம் திகதி வரை தடையுத்தரவு
1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைவர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள்
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய வண்ண மற்றும் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
கட்சித் தலைமையகத்தில் கடந்த 30.3.2024அன்று செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும், இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேபோல், அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தை நாட ஆயத்தம்
இதனை தொடரந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் (Mahinda Amaraweera) மகிந்த அமரவீர, பொருளாளர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) ஆகியோர் கூறியிருந்தனர்.
இவ்வாறான முறுகல் நிலை கட்சிக்குள் தொடரும் நிலையில் தற்போது தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமையானது கட்சிக்குள் ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மிக நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ள சந்திரிக்கா சுதந்திரக் கட்சி தொடர்பான விடயத்தில் மும்முரம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |