இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ள ஜே.வி.பி
தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கருத்து தெரிவித்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைபாடு செய்துள்ளார்.
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜேவிபி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்து காரணமாக ஹட்சன் சமரசிங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சபையில் தெரிவிப்பு
மேலும் அவர், 'தேர்தல் ஊடாக கணக்குகள் தீர்த்துக் கொள்ளப்படும் என்றும், நாட்டை விட்டு வெளியேற இடமளிக்க மாட்டோம் என்றும், ஒளிந்து கொள்ள இடமில்லை' என ஹட்சனுக்கு விடுக்கப்பட்ட வசந்த சமரசிங்கவின் மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியிடம் கோருகின்றோம்.
ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைபாடு செய்யும் போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே, ஹட்சன் சமரசிங்கவினால் இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |