இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாபிரிக்கா
புதிய இணைப்பு
இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை அணி நிர்ணயித்த சொற்ப இலக்கண 77 ஓட்டங்களை பெரும் தடுமாற்றத்திற்கு மத்தியிலேயே தென்னாபிரிக்கா கடந்திருந்தது.
இந்நிலையில் 16.2 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்கா அணி வெற்றியிலக்கை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரின் இன்றைய (03.06.2024) போட்டியில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சானது இலங்கை அணியை 100 ஒட்டங்களை கூட பெற விடாமல் மட்டுப்படுத்தியுள்ளது.
இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி 3 ஓவர் நிறைவில் 23 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கட்டுகளை அதிகபடியாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலககிண்ணத் தொடரின் இன்றைய (03.06.2024) போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொள்கின்றன.
குறித்த போட்டியானது நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
ஆரம்பத்தில் சரிவு
இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 9 ஓவர்கள் முடிவில் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெத்தும் நிசங்க 8 பந்துகளில் வெறும் 3 ஓட்டங்களை பெற்று ஒட்னியல் பார்ட்மென்னின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, களமிறங்கிய கமிந்து மென்டிஸ் 11 ஓட்டங்களுடன் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய வனிந்து ஹஸரங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
களத்தில் தற்போது குசல் மென்டிஸ் 18 ஓட்டங்களுடனும் சரித் அசலங்க 3 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
அதிரடி துடுப்பாட்ட வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி இலங்கையின் சகலதுறை வீரர்களின் துல்லியமான ஆட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது இந்த போட்டியின் சுவாரஷ்யத்தை அதிகரித்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் 2007ஆம் ஆண்டு ஆரம்பமான உலக கிண்ண தொடர்முதல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி உலகக்கிண்ண தொடர்வை இரு அணிகளும் தகுதிபெற்றுள்ளன.
இதில் இலங்கை அணி 2014 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் கோப்பையை சுவீகரித்ததோடு 2 முறைகள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது எனினும் தென்னாபிரிக்க அணி அனைத்து தொடர்களிலும் இறுதிச்சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்றுள்ள 17 டி 20 போட்டிகளில் தென்னாபிரிக்க 11 போட்டிகளிலும் இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளதோடு ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, மகேஷ் தீக்சன துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதே போல் தென்னாபிரிக்க அணி சார்பில் குவின்டன் டி கொக், ரீஸா ஹென்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), ஹென்ரிச் க்ளாசன், டேவிட் மில்லர், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மார்க்கோ ஜென்சன், கேஷவ் மகாராஜ், கெகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஒட்நீல் பார்ட்மன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |