சர்வதேச விமான நிலையமொன்றில் தவறுதலாக இறக்கிவிடப்பட்ட இலங்கை பயணிகள்!
பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானப் பயணிகள் பெரும் இடைஞ்சலை எதிர்கொண்டுள்ளனர்.
நேற்றையதினம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த 30 விமானப் பயணிகள், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) கவனக் குறைவால், உள்நாட்டு வருகை வாயிலில் தவறுதலாக இறக்கிவிடப்பட்டதாக NDTV தெரிவித்துள்ளது.

தவறான வாயிலில் இறக்கப்பட்ட பயணிகள்
பெங்களூர் விமான நிலையத்தில் சர்வதேச வருகை வாயிலுக்குப் பதிலாக அவர்கள் உள்நாட்டு வருகைப் வாயிலில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
"மார்ச் 17 அன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL 173 இல் பயணித்த 30 பயணிகள், சர்வதேச வருகைப் பேருந்து வாயிலுக்குப் பதிலாக BLR விமான நிலையத்தின் உள்நாட்டு வருகைப் பேருந்து வாயிலில் தவறுதலாக இறக்கிவிடப்பட்டனர்.
இந்தப் பயணிகள் உள்நாட்டுப் பயணிகளின் விமானப் பொருட்களை சோதனையிடும் பகுதிக்குள் நுழைந்தனர்" என்று பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் (BIAL) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உடனடியாக அது குறித்து மத்திய பாதுகாப்பு படை மற்றும் குடிவரவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முனைய செயல்பாட்டுக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

பயணிகளுக்கு அசௌகரியம்
"டெர்மினல் ஒபரேஷன்ஸ் குழுவுடன் CISF (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) மற்றும் குடிவரவுப் பிரிவு ஆகியவை எச்சரிக்கப்பட்டு, பயணிகள் உடனடியாக வழக்கமான சோதனைக்காக சர்வதேச வருகைக்கு மாற்றப்பட்டனர்.
அதன் பிறகு பயணிகள் சர்வதேச சாமான்கள் சோதனையிடும் பகுதிக்கு சென்றனர்," என்று BIAL செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
மனிதப் பிழையே விமான நிலையத்தின் நிலைமைக்கு இறுதியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், உடனடியாக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இனி வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாதிருக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பெங்களுர் விமான நிலைய ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        